முதல்வர் பதவியை குமாரசாமிராஜிநாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம்
By DIN | Published On : 29th January 2019 04:52 AM | Last Updated : 29th January 2019 04:52 AM | அ+அ அ- |

கர்நாடக முதல்வர் பதவியை குமாரசாமி ராஜிநாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லட்டும் என பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ள கருத்துகளால் வேதனையடைந்துள்ள முதல்வர் குமாரசாமி, தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ள நிலையில், அடுத்த முதல்வரைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர். இது முதல்வர் குமாரசாமி மீது காங்கிரஸ் கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாததையே எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ், மஜத கட்சிகளிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாத போது, கூட்டணி அரசு நீண்ட நாள் நீடிக்காது என்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லட்டும்.
மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். செயல்படாத ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. இதனை உணர்ந்து கூட்டணி அரசைக் கலைத்து விட்டுச் செல்ல முதல்வர் குமாரசாமி முடிவு செய்ய வேண்டும். நிரந்தர ஆட்சிக்கு பாஜகவுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இல்லை என்றாலும், காங்கிரஸ், மஜத கட்சியினருக்கு மக்கள் உரிய பாடத்தைக் கற்பிப்பார்கள் என்றார் அவர்.