முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரானது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும் என திராவிடர் கழகத்தின் தலைவர்


முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டம் (103-ஆவது திருத்தம்) 2019 மற்றும் அதன் விளைவுகள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:  சமூக ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு முறையை முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் வழங்க, அரசியலமைப்புச் சட்டத்தின் 103-ஆவது திருத்த மசோதாவை அவசர கதியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இது முன்னேறிய வகுப்பினரில் காணப்படும் ஏழைகளை முன்னேற்றுவதற்கு அல்ல,  அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டதாகும்.
அரசு வகுத்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பிரிவினருக்கான அளவுகோலின்படி,  முன்னேறிய வகுப்பினரில் ஏழைகள் யாரும் இல்லை.  இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.  இந்த சட்டம் இதுநாள் வரை கடைப்பிடித்து வந்த சமூக நீதிக்கு எதிரானதாகும்.
சமுதாயத்தில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள, நலிவடைந்துள்ள மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை போக்குவதற்காகவே இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி கொண்டுவரப்பட்டது. பொருளாதார நிலை மாறக் கூடியதாகும். ஆனால், சமூக நிலை மாறாதது.  எனவே, அதில் இருந்து விடுபடவே இட  ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.  இந்த சட்டத் திருத்த மசோதா முன்னேறிய வகுப்பினரில் உள்ளதாகக் கூறப்படும் ஏழைகளுக்கு உதவாது.   நடைமுறை சாத்தியமில்லாத 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் போராட்டம் நடத்த வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் புட்டரங்க ஷெட்டி,  கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் காந்தராஜ்,  பிற்படுத்தப்பட்டோர்  நல இயக்குநர் முகமதுமோசின், கர்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ரவி வர்மகுமார், எம்.பி. பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com