சுடச்சுட

    

    காங்கிரஸ், மஜதவில் சுய மரியாதையுள்ள எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வார்கள்: கே.எஸ்.ஈஸ்வரப்பா

    By DIN  |   Published on : 02nd July 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ்,  மஜதவில் சுய மரியாதையுள்ள எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வார்கள் என்று கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
    சிவமொக்காவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
    பெல்லாரி மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,367 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.30 கோடிக்கு ஜிந்தால் ஸ்டீஸ் வர்க்ஸ் நிறுவனத்துக்கு விற்க கர்நாடக அரசு எடுத்த முடிவைக் கண்டித்து,  காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் ராஜிநாமா செய்திருக்கிறார். இது வரவேற்க வேண்டியதாகும். சுய மரியாதையுள்ள எந்த காங்கிரஸ் எம்எல்ஏவாவது இந்தத் திட்டத்துக்கு ஒப்புக் கொள்வார்களா?  ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தை விற்க யார் யார் லஞ்சம் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. 
    கர்நாடக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த்சிங், எச்.கே.பாட்டீல் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதற்கு காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு செவிசாய்க்காததை தொடர்ந்து, ஆனந்த்சிங் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார். எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துகொண்டிருக்கிறார்கள், ஆனால் மாநிலத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க எந்த அமைச்சரும் முன்வரவில்லை. பெரும்பாலான அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கதான் உள்ளனர். 
    உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அமைதியாக இருக்க முடியுமா? சுயமரியாதையுள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள்.
    காங்கிரஸ், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள பல எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது உறுதி. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துகொண்டிருந்தால், இந்த கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதி. 
    முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதை எதிர்க்கவில்லை. ஹிந்து கோயில்களை நிறுவுவதற்காக வெளிநாடுகளுக்கு முதல்வர் குமாரசாமி பயணம் மேற்கொண்டால்,  அதற்காக மகிழ்வேன். ஆனால், வறட்சியால் மாநிலம் தத்தளித்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்தச் சுற்றுப்பயணம் தேவையா? என்பதே என் கேள்வி என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai