எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரம்: ஆளுநர் தலையிட பாஜக வலியுறுத்தல்

காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர்

காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் அங்கீகரிக்காமல் இழுத்தடிப்பதால்,  இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தியது.
மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்துவந்த 2 சுயேச்சைகள் திரும்பப்பெற்றுள்ள நிலையில்,  கூட்டணி அரசின் பலம் 117-ஆகக் குறைந்திருந்தது. இந் நிலையில், மஜத, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால்,   கூட்டணி அரசின் பலம் 101-ஆக உள்ளது.
பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்யக் கோரி பெங்களூரு விதான செளதாவில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக எம்எல்ஏக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 இதனிடையே,  பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தலைமையிலான பாஜகவினர் புதன்கிழமை ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  அதில், "கர்நாடக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் உள்ளிட்ட 224 உறுப்பினர்கள்,  ஒரு நியமன உறுப்பினர் உள்ளனர்.  சட்டப்பேரவைக் கூட்டத்தை ஜூலை 12 முதல் 26-ஆம் தேதி வரை நடத்த பேரவைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  மாநில நிதிநிலை அறிக்கையை நிறைவேற்ற இக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 
நிதிநிலை அறிகையை நிறைவேற்றாவிட்டால்,  ஊதியம் உள்ளிட்ட அரசின் செலவினங்கள் நின்றுவிடும்.  காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளதை தாங்கள்(ஆளுநர்)அறிவீர்கள்.  2 பேர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு,  பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால், ஆளும் கூட்டணிக் கட்சிகள் பேரவையில் சிறுபான்மையாக மாறியுள்ளது.
தன்னிடம் நேரிடையாக எம்எல்ஏக்கள் அளிக்கும் ராஜிநாமா கடிதங்களை பெற்றுக் கொள்ள வேண்டியது பேரவைத் தலைவரின் கடமையாகும்.  அஞ்சல் அல்லது முகவர் வழியாக ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தால், அதன் உண்மைத்தன்மையை பேரவைத் தலைவர் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களிடம் விசாரிக்கலாம்.  எனவே, எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை உடனடியாக அங்கீகரிக்க வேண்டியது பேரவைத் தலைவரின் கடமையாகும். 
தெளிவான சட்ட விதிகள் இருந்தும்,  எம்எல்ஏக்கள் தன்னைச் சந்திக்க பேரவைத் தலைவர் நேரம் கொடுத்துள்ளார். 
இது காலம் தாழ்த்தும் செயலாகும். இதன்மூலம் ராஜிநாமா கடிதங்களை ஏற்கும் நடைமுறையை தள்ளிப்போட முயற்சித்துள்ளார்.  ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் தங்களையும்(ஆளுநர்)சந்தித்து அதன் நகலைக் கொடுத்துள்ளனர். 
ஆளுங்கட்சிக்கு இது கட்சி நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், மக்கள் பிரதிநிதியாக, பேரவையில் நம்பிக்கையை இழ்ந்துவிட்ட அரசு ஆட்சியில் தொடர்வதை கேள்வி கேட்கும் கடமை எங்களுக்கு உள்ளது. ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களை அமைச்சர்கள் மிரட்டி வருகிறார்கள்.  இது ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்ய முற்பட்டால் அதை கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்குமில்லை. 
அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளைச் செயல்படுத்தும் வகையில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை அங்கீகரிக்க பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்துமாறு தங்களை(ஆளுநர்) கேட்டுக் கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்தச் சந்திப்பின்போது முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்,  முன்னாள் துணைமுதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது:  முதல்வர் குமாரசாமி தனது பெரும்பான்மையை இழந்துள்ளார்.  எனவே, அவர் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா  செய்ய வேண்டும். இனி மேலும் தாமதம் செய்யாமல் எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்கவேண்டும். 
எங்கள் மனுவை அலசி ஆராய்ந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  எங்களுக்கு இந்த சந்திப்பு முழு திருப்தி அளிக்கிறது. எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டால்,  ஜூலை 12-ஆம் தேதி பேரவைக் கூட்டம் தொடங்காது.  மேலும் பல எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள்.  முதல்வர் குமாரசாமி உண்மை நிலையை உணர்ந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக ராஜிநாமா கடிதம் கொடுக்க
வேண்டும் என்றார்.

முதல்வர் குமாரசாமி பதவி விலகக் கோரி பாஜக தர்னா
பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதால் முதல்வர் குமாரசாமி பதவி விலகக்கோரி பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டனர்.
அண்மையில் காங்கிரஸ், மஜத கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால், முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கூறி எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் புதன்கிழமை விதான செளதா காந்தி சிலை அருகே தர்னாவில்
ஈடுபட்டனர். 
போராட்டத்தில் கலந்து கொண்ட எடியூரப்பா பேசியது: கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லாத காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர். இதனால் அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். பெரும்பான்மை இழந்த பிறகும் முதல்வர் பதவியில் குமாரசாமி ஒட்டிக் கொண்டுள்ளார் என்றார்.

"கூட்டணி அரசு இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது'
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆளுநர் வஜுபாய் வாலாவை பாஜக முன்னணித் தலைவர்கள் சந்தித்து, எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பில்லை, ராஜிநாமா கொடுத்துள்ள எம்எல்ஏக்கள் மீது வன்முறை ஏவப்படுவதை அவரது கவனத்துக்கு கொண்டுவந்தோம். 
அதன்பிறகு சில மணி நேரத்தில் அமைச்சரான எம்.டி.பி.நாகராஜ், எம்எல்ஏ கே.சுதாகர் ஆகியோர் மீது விதானசெளதாவில் வன்முறை ஏவப்பட்டுள்ளது. அமைச்சரே எம்எல்ஏவின் கழுத்தை நெரித்து இழுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் அறையில் சுதாகர் அடைத்துவைத்து மிரட்டியுள்ளனர். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 
ஜூலை 12-ஆம் தேதிமுதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவிருப்பதால், பாஜக எம்எல்ஏக்கள் மீண்டும் வியாழக்கிழமை சந்தித்து பேசவிருக்கிறோம். அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் ஆராய்வோம். பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்து ஒருமணி நேரம் பேசியுள்ளோம். ராஜிநாமா கொடுத்துள்ள எம்எல்ஏக்களின் கடிதத்தை அங்கீகரிக்காமல் இழுத்தடிப்பது சரியான நடவடிக்கையல்ல. எனவே, ராஜிநாமா கடிதங்களை உடனே ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அவர் என்ன செய்கிறார் என்பதை பார்ப்போம்.
ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். இன்னும் 2-3 நாள்களில் தெளிவான பார்வை கிடைக்கும். மாநிலத்தின் அரசியல் நிலவரங்களை கவனித்து தகுந்த நடவடிக்கையில் ஈடுபடுவோம். அடுத்த 4-5 நாட்களில் புதுதில்லி சென்று கர்நாடக அரசியல் நிலவரங்களை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் விளக்குவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com