கர்நாடக அரசியல் சூழ்நிலை அவசரநிலையைவிட மோசமானது: எச்.டி.தேவெ கெளடா

தற்போதைய அரசியல் சூழ்நிலை அவசரநிலையைவிட மோசமானது என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை அவசரநிலையைவிட மோசமானது என்று மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதை கண்டித்து, பெங்களூரு மின்ஸ்க் சதுக்கத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சென்ற முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அகிய இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுனகார்கே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காங்கிரஸ், மஜத தொண்டர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆனாலும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முற்பட்டனர். போலீஸார் அனுமதி அளிக்காததால், சாலையில் அமர்ந்து அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைக் கைதுசெய்து பேருந்தில் ஏற்றி அழைத்துசென்ற போலீஸார், பின்னர் விடுவித்தனர்.
இதற்கு முன்னதாக, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, செய்தியாளர்களிடம் கூறியது: தற்போதைய அரசியல் சூழ்நிலை, அவசரநிலையைவிட மோசமானதாக உள்ளது. மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்குள் செல்ல காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை போலீஸார் அனுமதிக்கவில்லை. 
அந்த நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு ஏற்கெனவே அறை முன்பதிவு செய்திருந்தும் அவரை உள்ளேவிடாமல் தடுத்துள்ளனர். எனது 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவத்தை நான் கண்டதில்லை. எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் என்றார்.
அப்போது உடனிருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியது: மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. இதை உடனடியாக நிறுத்தாவிட்டால், கர்நாடகத்தில் பாஜக தலைவர்கள் எங்கு சென்றாலும், காங்கிரஸ், மஜத தொண்டர்கள் போராட்டம் நடத்துவார்கள். கர்நாடகத்தில் பாஜக தலைவர்கள் நடமாட முடியாத நிலையை உருவாக்குவோம். மக்களை சந்திக்கக்கூடவிட முடியாத அளவுக்கு போராட்டத்தை தீவிரமாக்குவோம். 
அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படும் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பாஜகவினரின் பணத்தாசைக்கு ஆள்பட்டு பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மும்பைக்கு சென்றுள்ளனர். 
பணம் மற்றும் அதிகாரத்துக்காக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். தங்களை தாங்களே  விற்றுக் கொண்டுள்ளனர். பாஜகவின் ஆசைவார்த்தைகளுக்கு இணங்க வேண்டாம் என்று மும்பையில் தங்கியுள்ள எம்எல்ஏக்களைக் கேட்டுக் கொள்கிறோம். எனவே, மும்பையில் இருந்து திரும்பி, தங்கள் ராஜிநாமாவை எம்எல்ஏக்கள் திரும்பபெற வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள். இல்லாவிட்டால் பாஜகவுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள் என்றார்.
முன்னதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, அதிருப்தி எம்எல்ஏக்களை பதவிநீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

"மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நிலைக்கும்'
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நிலைக்கும் என நம்பிக்கை உள்ளதாக  முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு குமாரகுருபா விருந்தினர் இல்லத்தில் புதன்கிழமை கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் முன்னணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல்தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியது: காங்கிரஸ் எம்எல்ஏ கே.சுதாகர் சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரிடம் நான் பேசினேன். கே.சுதாகர் எங்கள் கட்சியின் எம்எல்ஏ. எனவே, அவரை கடத்தியதாகக் கூறுவதில் அர்த்தம் இல்லை. அவரிடம் பேசுவதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது. அதன்படி, கே.சுதாகரிடம் பேசினோம், அவ்வளவுதான். கே.சுதாகரைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமையாகும். 
அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தனது பதவியை ஏன் ராஜிநாமா செய்தார் என்பது தெரியவில்லை. தான் ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று எம்.டி.பி.நாகராஜ் என்னிடம் கூறியிருந்தார். கே.சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் உள்பட தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் எனது நலன்விரும்பிகள். பாஜகவின் அழுத்தம் மற்றும் பணத்தாசைக்கு இணங்கி பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 
ராஜிநாமா கடிதங்கள் ஏற்கப்படும் வரை ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் அனைவரும் எங்கள் கட்சியினரே. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கணேஷ் ஹுக்கேரி, சுப்பாரெட்டி, அஞ்சலி நிம்பல்கர், சிவண்ணா ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

எச்.டி.தேவெகௌடா, சித்தராமையா திடீர் போராட்டம்
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சியை கண்டித்து, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முன்னாள் பிரதமர் சித்தராமையா திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கூறி முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முன்னாள் பிரதமர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸார், கைது செய்து பின்னர் விடுவித்தனர். 
காங்கிரஸ், மஜத கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்தததையடுத்து, முதல்வர் குமாரசாமி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் விதான செளதா அருகே உள்ள காந்தி சிலை முன் தர்னாவில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்த எடியூரப்பா உள்ளிட்டோர், பின்னர் ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து, கூட்டணி ஆட்சியில் குழப்பம் நிலவுவதால், மாநிலத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆளுநர் இதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர். 
இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com