முதல்வரின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம்: எடியூரப்பா

பேரவையில் முதல்வரின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என்று பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்தார்.

பேரவையில் முதல்வரின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என்று பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு விதான செளதாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராஜிநாமா செய்துள்ள 10 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 10 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள்மீது பேரவைத்தலைவர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. 
ராஜிநாமா கடிதங்களை ஏற்கவோ, நிராகரிக்கவோ, பதவிநீக்கம் செய்யவோ நடவடிக்கை எதுவும் எடுக்கமுடியாது. மேலும் இந்த எம்எல்ஏக்களை விசாரிக்கவும் பேரவைத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கொறடா உத்தரவு, இந்த 10 எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது. இதன்மூலம் மும்பையில் தங்கியுள்ள 10 எம்எல்ஏக்களுக்கும் தார்மிகபலம் கிடைத்துள்ளது. 
ஜூலை 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதுவரை காத்திருப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அவரது விருப்பம். அதை நாங்கள் எதிர்கொள்வோம். 
பாஜக எம்எல்ஏக்கள் எல்லோரும் ஒரே இடத்தில் தங்கியிருக்க கேட்டுக் கொண்டனர். அதற்கு சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஜக எம்எல்ஏக்களை இழுப்பார்கள் என்பதற்காக நாங்கள் நட்சத்திர விடுதிக்கு அனுப்பவில்லை. பாஜகவுக்கு பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட வேலைகளில் இருந்ததால் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com