1 லட்சம் மாணவர்களுக்கு பேருந்து அட்டைகள் விநியோகம்

பெங்களூரில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பேருந்து அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


பெங்களூரில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பேருந்து அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக அரசு உத்தரவின்பேரில் சலுகைக் கட்டணத்தில் மாணவர்களுக்கு பேருந்து அட்டைகள் விநியோகிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் ஸ்மார்ட் அட்டையாக பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக  இணையதளத்தின் வழியே விண்ணப்பங்களைச் செலுத்த மாணவர்கள் கேட்கப்பட்டிருந்தார்கள். 
அதனடிப்படையில், ஜூன் 13-ஆம் தேதி இணையதளத்தின் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூன் 17-ஆம் தேதி முதல் அவை அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 50 சேவையகங்கள் வழியாக பேருந்து அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 
ஜூலை 16-ஆம் தேதி வரையில் 2,03,314 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலித்து 1,01,977 பேருந்து அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சரியான ஆவணங்களை தாக்கல் செய்யாததால், 29,637 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்கள் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வழியாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. 
25,610 விண்ணப்பங்கள் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கின்றன. 46,090 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதை பெறுவதற்கு இணையதளத்தில் தேதி, நேரம், இடம் ஆகியவற்றை முன்பதிவு செய்து பேருந்து அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்க வசதியாக, கழகத்தின் இணையதளத்தில் பள்ளிகள் தங்கள் விவரங்களை அளித்து பதிவுசெய்து கொள்ள வேண்டியது அவசியம் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com