நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் கோரிக்கை

கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காரணம்காட்டி பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காரணம்காட்டி பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு,விதான செளதாவில் வியாழக்கிழமை கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும், நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் குமாரசாமி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குறுக்கிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, கர்நாடக சட்டப்பேரவை அலுவல் விதி-350-இன்படி ஒழுங்கு பிரச்னையை எழுப்பிப் பேசுகையில்,  அரசியலமைப்புச் சட்டப்படி ஒருசில விவகாரங்களில் எனக்கு விளக்கம் தேவைப்படுகிறது.  1967-இல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கயாலால், ஒரேநாளில் 3 முறை கட்சித் தாவினார்.  இதைத்தொடர்ந்து, 1985-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார்.  அரசியலமைப்புச் சட்டத்தின் 52-ஆவது திருத்தத்துக்கு இச் சட்டம் வழிவகுத்தது' என்றார். 
அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர் மாதுசாமி, ஒழுங்கு பிரச்னை என்னவென்று கூறாமல் காலவிரயம் செய்வது போல பேசுவது சரியல்ல' என்றார்.  அப்போது, காங்கிரஸ், பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. 
தொடர்ந்து பேசிய சித்தராமையா, அரசியலமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணை உயிர்ப்புடன் இருக்கிறது.  இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில் சட்டப்பேரவையில் கலந்துகொள்ள 15 எம்எல்ஏக்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.  கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருக்கு உள்ளது.  அப்படியானால், 15 எம்.எல்.ஏ.க்களுக்கு நான் பிறப்பித்துள்ள கொறடா உத்தரவு என்னாவது?  காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் கும்பலாகச் சென்று ராஜிநாமா செய்துவிட்டு, கும்பலாக மும்பை சென்றுள்ளனர். 
அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டணி அரசைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது.   அப்படியிருக்கையில், 10-ஆவது அட்டவணையை புறந்தள்ளிவிட்டு, சட்டப்பேரவைக்கு வருவதை 15 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டாயப்படுத்த முடியாது என்பது சரியல்ல.  கொறடா உத்தரவைக் கொடுத்தால், அதை மதிக்க வேண்டியது எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு கட்டாயமாகும்.
15 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்துள்ள வழக்கில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரான என்னை பிரதிவாதியாகச் சேர்க்கவில்லை. இது ஏன்?  ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்,  பதவிநீக்கம் நடவடிக்கையை செயல்படுத்தக் கூடாது என்பதுதானே உச்ச நீதிமன்றத்தில் 15 எம்எல்ஏக்களின் கோரிக்கையாக இருந்தது. 
கொறடா உத்தரவு பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லாவிட்டாலும்,  சட்டப்பேரவைக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்பது எப்படி சரியாகும்.  இது எனது உரிமையை மழுங்கடிக்கும் முயற்சி' என்றார்.  
இதற்கு பாஜக உறுப்பினர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்தனர். 
இதைத் தொடர்ந்து,  பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் விளக்கம் அளித்தார்.  இது தொடர்பாக பேரவைத் தலைவருடன் பாஜக உறுப்பினர்கள் பி.எஸ்.எடியூரப்பா,  மாதுசாமி, கே.ஜி.போப்பையா,  ஜெகதீஷ் ஷெட்டர்,  சுரேஷ்குமார்,  பசவராஜ் பொம்மை, காங்கிரஸ்  உறுப்பினர்கள் எச்.கே.பாட்டீல், கிருஷ்ணபைரே கெளடா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் வாத-பிரதிவாதங்களில் ஈடுபடத் தொடங்கினர். 
இதனிடையே,  சித்தராமையா தனது பேச்சைத் தொடர்ந்து, ஒருசிலரின் நெருக்கடி காரணமாக 15 எம்எல்ஏக்களும் ராஜிநாமா செய்துவிட்டு,  அவைக்கு வராமல் இருக்கிறார்கள். ஆனால், அவைக்கு வர வேண்டுமென்று கொறடா உத்தரவு பிறப்பிக்கும் உரிமை எனக்கிருக்கிறது.  இந்த உரிமையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மழுங்கடித்துள்ளது.  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் கேள்விக்கு உட்படுத்தவில்லை.  உச்ச நீதிமன்றத்தின் மீது நன்மதிப்புள்ளது.  ஆனால்,  சட்டப்பேரவையின் அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது என்பதே எனது வாதம்.  சட்டப்பேரவையின் மாண்பைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். 
 உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பால் உந்தப்பட்டதால்தான் 15 எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரவில்லை.  10-ஆவது அட்டவணையின்படி உறுப்பினர்கள் அவைக்கு வராதபோது, நம்பிக்கை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்வதால், கூட்டணி அரசுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  எனவே, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறும் வரையில்,  15 எம்எல்ஏக்களை அவை நடவடிக்கையில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்த முடியாது.  இதுதொடர்பாக விளக்கம் கிடைக்காத நிலையில், நம்பிக்கை தீர்மானத்தை தள்ளிவைக்கவேண்டும்.  எனவே, தற்போதைக்கு நம்பிக்கை தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது' என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ்,  பாஜக உறுப்பினர்களிடையே வாத-பிரதிவாதங்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com