பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளுநரிடம் பாஜக புகார்

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை  வாக்கெடுப்பை நடத்தாமல் ஆளும் கட்சி காலம் கடத்துவதாக ஆளுநரிடம் பாஜக புகார்அளித்துள்ளது.


கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை  வாக்கெடுப்பை நடத்தாமல் ஆளும் கட்சி காலம் கடத்துவதாக ஆளுநரிடம் பாஜக புகார்அளித்துள்ளது.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்த பேரவைத் தலைவருக்கு வழிகாட்டுதல் வழங்குமாறும் ஆளுநரிடம் பாஜக கோரிக்கை விடுத்தது.
பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை சட்டப்பேரவை கூடியதும், நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு முதல்வர் குமாரசாமியை பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.  அதன்பிறகு முதல்வர் குமாரசாமி, தனது கூட்டணி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து பேசத் தொடங்கினார். 
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும்,முன்னாள் முதல்வருமான சித்தராமையா, காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதால், அதுதொடர்பான தெளிவு ஏற்படும் வரை நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.
அவை ஒத்திவைப்பு: இந்த நிலையில்,  சித்தராமையா ஒழுங்கு பிரச்னையை பேரவையில் கொண்டுவரலாமா?  கொண்டுவரக் கூடாதா? என பாஜக,  காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே தொடர் விவாதம் நடைபெற்றதால்,  நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறவில்லை.  இதற்கு பாஜக கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், நண்பகல் 1.45 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஆளுநரிடம் புகார்: இதைத் தொடர்ந்து,  ஆளுநர் வஜுபாய் வாலாவை வியாழக்கிழமை சந்தித்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பசவராஜ்பொம்மை, விஸ்வநாத், அரவிந்த்லிம்பாவளி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் அடங்கிய பாஜக குழுவினர், நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக புகார் மனுவை அளித்தனர். 
இதுதொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களிடம் கூறியது:  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்ற முயற்சி நடைபெறுவதாக எங்களுக்கு அச்சம் உள்ளது. நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் கடத்தும் வேலையில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது.  நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்துமாறு பேரவைத் தலைவருக்கு வழிகாட்டுதல் வழங்க ஆளுநரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 
நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் முயற்சி நடக்கிறது.  எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்த வேண்டும்.  இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, சட்ட வரம்புக்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்றார்.
பேரவைத் தலைவருக்கு
தகவல்: இந்த நிலையில், மாலை 3 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் ஆளுநர் அனுப்பியிருந்த தகவலை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அவையில் தெரிவித்தார்.  அவையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆளுநர் அனுப்பிய அதிகாரியும்,  சட்டப்பேரவையின் அதிகாரிகள் மாடத்தில் அமர்ந்திருந்தார்.  ஆளுநரின் தகவலைத் தொடர்ந்து, அதற்கு அதிகாரம் இருக்கிறதா?  என்பது தொடர்பாக காங்கிரஸ்,  மஜத உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர்.
இந்த விவகாரத்தால் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூச்சல், குழப்பம் நிலவியது.  இதையடுத்து, மாலை 4 மணி மற்றும் மாலை 5.45 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு: மேலவை ஒத்திவைப்பு
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடைபெற்றதையடுத்து சட்ட மேலவை ஒத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதனால் சட்ட மேலவையில் கூட்டம் அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன், காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ள காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் உடனடியாக அழைத்து வர வேண்டும் என வலியுறுத்தினர். காங்கிரஸ், மஜதவினரைக் கண்டித்து, பாஜகவினரும் குரல் எழுப்பினர். இதனால் மேலவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டமேலவைத் தலைவர் பிரதாப் சந்திரஷெட்டி தலையிட்டு, சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக சட்ட மேலவையை பிற்பகல் வரை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
பாஜக உள்ளிருப்புப் போராட்டம்
கர்நாடக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறாததைக் கண்டித்து,  பாஜகவினர் பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அப்போது, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஒழுங்கு பிரச்னையைக் கொண்டுவந்தார். 
திசை மாறிய விவாதம்:  நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் குமாரசாமி முழுமையாகப் பேசாத நிலையில், சித்தராமையாவின் ஒழுங்கு பிரச்னை சரியானதா? இல்லையா? என்பது தொடர்பாக பாஜக, காங்கிரஸ், மஜத உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது.
இதனிடையே,  நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்துமாறு பேரவைத் தலைவருக்கு வழிகாட்டுதல் வழங்க பாஜகவினர் அளித்த கோரிக்கை மனுவை ஏற்று,  ஆளுநர் பேரவைத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் அவையில் வாசிக்கப்பட்டது.  இதையடுத்து, சட்டப்பேரவையின் நடவடிக்கையில் ஆளுநர் தலையிடுவது சரியா? என்பதும் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
எம்எல்ஏ மாயம்?: காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீமந்தபாட்டீல், இரவோடு இரவாக பாஜகவினரால் மும்பைக்கு அழைத்துசச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாதக் கூறி, காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.  இதனால் அவையில் அமளி நிலவியது.
உள்ளிருப்புப் போராட்டம்: அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, நம்பிக்கை தீர்மானத்தின் மீது வியாழக்கிழமையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் தகவல் அளித்த பிறகும், காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் காலை முதல் மாலை வரை காலவிரயம் செய்து அவையை நடத்தவிடாமல் செய்துவிட்டனர்.  இதை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையிலே தங்கியிருந்து உள்ளிருப்புப்போராட்டம் நடத்தப் போகிறோம். நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். 
முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 15 நிமிடங்கள்கூட விவாதம் நடத்தவில்லை.  ஆளுங்கட்சி உறுப்பினர்கள், நம்பிக்கை தீர்மானத்துக்கு சம்பந்தமில்லாத விவகாரங்களை முன்வைத்து நேரத்தை வீணடித்துவிட்டனர்.  அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நாட்டில் வேறு எங்கும் நடந்ததில்லை. இதை கண்டிக்கும் வகையில் நாங்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்போகிறோம்' என்றார்.
அவை ஒத்திவைப்பு: இதைத் தொடர்ந்து, அவையை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பேரவை  துணைத் தலைவர் கிருஷ்ணா ரெட்டி ஒத்திவைத்தார்.
இன்று நண்பகல் நம்பிக்கை வாக்கெடுப்பு
கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் அனுப்பியுள்ள கடித விவரம்:  அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 172-இன்படி கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30 மணிக்குள் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசுவதற்கு அனைவருக்கும் பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். 
15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து,  அதன் கடிதங்களை தன்னிடம் அளித்துள்ளதோடு,  முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் அவர்கள் திரும்பப் பெற்றுள்ளதாக அந்த கடிதத்தில்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படும்'
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டுவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு 100 சதவீதம் தோற்கடிக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் எடியூரப்பாகூறியது: 
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டுவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு 100 சதவீதம் தோற்கடிக்கப்படும்.  கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ்,  மஜதவுக்கு எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தெரியவில்லை.  ஆனால்,  பாஜகவுக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. 
100-க்கும் குறைவான உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்குக் கிடைக்கும்.  இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்வாரா? என்பது தெரியவில்லை. 
கக்வாட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்தபாட்டீல் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றால்,  அவரை பற்றி எனக்கும் எந்தத் தகவலும் இல்லை என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த பாட்டீல் மும்பைக்குப் பயணம்: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி
காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த பாட்டீல் இரவோடு இரவாக மும்பைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதையடுத்து,  காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காங்கிரஸ், மஜதவில் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு,  மும்பைக்குச் சென்று தங்கியுள்ளனர்.  ஒருசிலர் பெங்களூரு உள்ளிட்ட ரகசிய இடங்களில் தங்கியுள்ளனர்.  மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து,  காங்கிரஸ், மஜத, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெவ்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். 
இந்த நிலையில், முதல்வர் குமாரசாமி கேட்டு கொண்டதற்கிணங்க வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதனிடையே, புதன்கிழமை நள்ளிரவு நட்சத்திர ஹோட்டலிலிருந்து காக்கவாடா தொகுதி எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த பாட்டீல் பாதுகாப்புகளை மீறி வெளியேறிச் சென்றார். 
அவர் எங்கு சென்றிருப்பார் என்று உடன் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்கள் தவித்த நிலையில்,  அவர் இரவோடு இரவாக மும்பைக்குப் பயணமாகியுள்ளது தெரியவந்தது.  இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.  மும்பை சென்ற ஸ்ரீமந்த பாட்டீல் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதாக புகைப்படம், காணொலி துணுக்கு (விடியோ) வெளியானது. 
இதைத் தொடந்து, கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்ட முதல்வர் குமாரசாமி,  காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தினேஷ் குண்டுராவ்,  அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த பாட்டீல் கடத்திச் செல்லப்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர். 
இதைத் தொடர்ந்து பேசிய டி.கே.சிவக்குமார்,  எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.  கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் செல்லிடப்பேசி மூலம் என்னை அழைத்துத் தெரிவித்தனர்.  அவரை இங்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாஜகவைச் சேர்ந்த லக்ஷமண்சவதி அவரை வலுக்கட்டாயமாக விமானத்தின் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றார். 
இதற்குப் பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்,  ஸ்ரீமந்த பாட்டீலிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.  அதில் இதய நோயால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த கடிதம் முறையாக எழுதப்படவில்லை.  அந்த கடிதம் இயற்கையாக எழுதப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் நான் குழம்பியுள்ளேன் என்றார்.
இதைத் தொடர்ந்து,  மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல்,  ஸ்ரீமந்த பாட்டீலின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு,  அவரது உடல்நலம் குறித்து விசாரித்து, எனக்கு விவரம் தெரிவிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் ஜனநாயகத்தை அவமதிப்பதாகும்'
கர்நாடக சட்டப்பேரவையில் நிகழ்ந்தவை    நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் இருந்தன  என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு விதான செளதாவில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினால் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிடும் என்று சித்தராமையா கூறினார்.  அதற்காகவே காலை முதல் மாலை வரை கால விரயம் செய்யும் வேலையில் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டனர். கூட்டணி அரசைக் காப்பாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர்.  இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கவனித்துக் கொண்டுள்ளது.  பாஜக அளித்த புகாரின்பேரில், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தவேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா தகவல் அனுப்பியிருந்தார்.  நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்திருந்த தகவல் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கக் கேட்டுக்கொண்டாலும்,  அதையும் செய்யவில்லை. 
ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது.  கடந்த 3 மாதங்களாக அரசு முடங்கியுள்ளது.  பணியிட மாற்றத்தில் முறைகேடு நடந்துவருகிறது.  வறட்சி நிவாரணப் பணிகளைக் கவனிக்க யாருமில்லை.  ஆட்சியில் நீடிக்கும் அதிகாரத்தை முதல்வர் குமாரசாமி இழந்துவிட்டார்.  நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தாமல் முதல்வர் குமாரசாமி பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும்.
பெரும்பான்மை பலம் இல்லை என்பது நம்பிக்கை தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாக முதல்வர் குமாரசாமிக்குத் தெரியவில்லையா?  சட்டப்பேரவையில் பாஜகவினர் 105 பேரும், காங்கிரஸ், மஜதவினர் 95 பேரும் இருந்தனர்.  அதனால்தான் இரவு 12 மணி ஆனாலும் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  பாஜகவினர் யாரும் விவாதத்தின் மீது பேச விரும்பவில்லை. காங்கிரஸ், மஜதவினர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும்.  அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் காங்கிரஸ்,  மஜதவினர் காலவிரயம் செய்வதோடு,  பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர். 
அவையை ஒத்திவைக்க வேண்டும்,  அதற்கு பாஜகவினரை தூண்டிவிடவேண்டும் என்பதே கூட்டணியினரின் நோக்கமாக இருந்தது.  அதனால்தான் பாஜகவினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம்.  கூட்டணியினரின் நடவடிக்கைகளை நாட்டு மக்களும், மாநில மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.  இதேபோல, எத்தனை நாளைக்கு அவையை நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.  கர்நாடக சட்டப்பேரவையில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம்,  அவமரியாதை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com