கர்நாடகத்தில் தொடரும் நிலையற்ற அரசியல்!

இந்தியாவின் கவனத்தை ஈர்த்த பல முதல்வர்கள் கர்நாடகத்தில் இருந்திருந்தாலும், நிலையற்ற அரசியல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கர்நாடகத்தில் தொடரும் நிலையற்ற அரசியல்!

இந்தியாவின் கவனத்தை ஈர்த்த பல முதல்வர்கள் கர்நாடகத்தில் இருந்திருந்தாலும், நிலையற்ற அரசியல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரும் புதிருமாக களமிறங்கியிருந்த மஜதவும், காங்கிரஸும்,தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க, கூட்டணி அரசு அமைத்தன. முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்து 14 மாதங்கள் ஆகிவிட்டன.
 கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்: கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க இதுவரை 6 முறை நேரடியான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. இந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு, ஜூலை 1-ஆம் தேதி முதல் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்ததால் பிரச்னை ஏற்பட்டது.
 ஆட்சியைத் தக்கவைக்க முதல்வர் குமாரசாமி திண்டாடிவருகிறார். 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி ராஜிநாமாவை திரும்பபெற்றதை தொடர்ந்து, 15 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆட்சியை கவிழ்த்துவிட்டு தான் பெங்களூரு திரும்புவோம் என்று மும்பையில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ஆட்சி கவிழும் என்பதை மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அறிந்திருந்தாலும், அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சமரச பேச்சுவார்த்தையும், சட்டப்போராட்டத்தின் வாயிலாக ஆட்சியை தக்கவைக்க கடைசிக்கட்ட முயற்சியும் மஜதவும் காங்கிரஸும் முன்னெடுத்துள்ளன. கூட்டணி அரசு நிலைக்குமா? நிலைக்காத? என்ற கேள்விக்கு விடைகாணும் ஆவலில் நாட்டுமக்கள் காத்திருக்க, கர்நாடக அரசியலில் தொடரும் நிலையற்ற அரசியல், சமூக ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.
 மீள் பார்வை: நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1952-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற முதல் சடப்பேரவை தேர்தலின் முடிவில் கெங்கல்ஹனுமந்தையா முதல்வரானார். விதானசெளதா கட்டியதில் முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டியதால் கெங்கல் ஹனுமந்தையா பதவியை ராஜிநாமா செய்ய, அந்த குற்றச்சாட்டை சுமத்திய கடிதாள் மஞ்சப்பா முதல்வரானார்.
 காங்கிரஸில் உள்பூசல்களுக்கு தகுந்தபடி எஸ்.நிஜலிங்கப்பா, பி.டி.ஜாட்டி, எஸ்.ஆர்.கந்தி, வீரேந்திர பாட்டீல், டி.தேவராஜ் அர்ஸ், ஆர்.குண்டுராவ் என அடுத்தடுத்து பலர் முதல்வர்கள் ஆனார்கள்.
 கர்நாடகத்தில் முதன்முறையாக 1983-இல் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. 4 ஆண்டுகாலம் முதல்வராகப் பதவிவகித்தாலும் அதற்குள் 2 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்துவிட்டன. 1983-இல் தான் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லாதவகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தன.
 பாஜக, கிராந்தி ரங்கா கட்சிகளின் ஆதரவில் ஜனதா கட்சி ஆட்சி நடந்தாலும், வெளியே ஆதரவுஅளித்திருந்தன. ஆட்சிக்கு பிரச்னை ஏற்படுத்தியவர்கள் அனைவரும் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். ஜனதாகட்சியை சேர்ந்த எச்.டி.தேவெகெளடா உள்ளிட்டோர் கொடுத்த நெருக்குதலில் தனது பதவியை ராமகிருஷ்ணஹெக்டே ராஜிநாமா செய்ய, எஸ்.ஆர்.பொம்மை முதல்வரானார். அவரையும் எச்.டி.தேவெகெளடா விட்டுவைக்கவில்லை. கோஷ்டிசேர்த்துகொண்டு ஆட்சியில் கலகத்தை விளைவிக்க, ஆட்சிகலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி ஏற்பட்டது.
 5 ஆண்டுகளில் 2 முதல்வர்கள் போன்ற அரசியல் குழப்பங்களால் வெறுப்படைந்திருந்த மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து ஆட்சியை ஒப்படைத்தனர்.
 வீரேந்திர பாட்டீல் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு, உள்கட்சிப் பூசல்களால் பிரச்னைகள் எழும்ப ஆரம்பித்தது.இதன் விளைவாக, 5 ஆண்டுகால காங்கிரஸ் அரசில் வீரேந்திரபாட்டீல், எஸ்.பங்காரப்பா, எம்.வீரப்பமொய்லி முதல்வரானார்கள். இதனால் கோபமடைந்த மக்கள் மீண்டும் ஜனதா கட்சியின் புதியவடிவமான ஜனதா தளத்துக்கு வாக்களித்தனர். முதல்வராக பதவியேற்ற எச்.டி.தேவெகெளடா, 2 ஆண்டுகளில் பிரதமராக உயர்ந்ததால் ஜே.எச்.பாட்டீல் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்தகாலக்கட்டத்தில் அரசியல் குழப்பம் எதுவும் இல்லாமல் இருந்தது.
 கூட்டணி அரசியல்: 1999 முதல் 2019-ஆம் ஆண்டுவரையிலான 20 ஆண்டுகால கர்நாடக அரசியல் பல விசித்திரமான நிகழ்வுகள் நேரிட்டன. இந்த காலக்கட்டத்தில் 5 சட்டப்பேரவைத்தேர்தல்கள் நடந்தன, 2 தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, 10 முதல்வர்கள் பதவியேற்றிருந்தனர்.
 1999-இல் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. 1979 முதல் 1999 வரையிலான 20 ஆண்டுகாலத்தில் எந்தவித தங்குதடையுமின்றி ஆட்சி புரிந்த முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மட்டுமே. இந்தியாவின் சிறந்த முதல்வராகப் போற்றப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா தனது ஆட்சி முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார்.
 நல்லாட்சியை எஸ்.எம்.கிருஷ்ணா அளித்திருந்தாலும், 2004-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கர்நாடக அரசியல் வரலாற்றின் போக்கை முழுமையாக மாற்றியமைத்தது. எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காததால், கர்நாடகத்தில் முதன்முறையாக தலா இரண்டரை ஆண்டுகால ஆட்சி என்ற ஒப்பந்தத்தின்பேரில் காங்கிரûஸ சேர்ந்த என்.தரம்சிங் தலைமையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைந்தது. ஆனால் பல பிரச்னைகளும், சவால்களையும் இந்த ஆட்சி சந்திக்க நேரிட்டது.
 என்.தரம்சிங் தலைமையிலான அரசுக்கு மஜதவினர் பெரும் நெருக்கடியை கொடுக்கத் தொடங்கினர். ஆனாலும் பொதுநன்மை கருதி அனைத்தையும் சகித்துகொண்டிருந்த என்.தரம்சிங் ஆட்சியை, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடாவின் மகன் எச்.டி.குமாரசாமி 2006-ஆம் ஆண்டில் கவிழ்த்துவிட்டார். மஜத எம்எல்ஏக்களை பிரித்துகொண்டு சென்று பாஜகவின் எடியூரப்பாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தார்.
 களங்க அரசியல்: எஞ்சியிருந்த 40 மாத ஆட்சியை தலா 20 மாதங்கள் ஆட்சி செய்வது என்ற ஒப்பந்தத்தின்பேரில் முதல்வராக குமாரசாமியும், துணைமுதல்வராக எடியூரப்பாவும் மஜத-பாஜக கூட்டணி ஆட்சியை உருவாக்கினர். பதவி ஆசையில் ஒன்றுசேர்ந்த குமாரசாமியும் எடியூரப்பாவும் "தாமரை இலை மீதான நீர்போல..' இருந்துகொண்டு ஆட்சி செய்தனர்.
 20 மாதங்களுக்குப் பின்னர் எடியூரப்பாவுக்கு ஆட்சித்தலைமையை ஒப்படைக்காததால், 2007-இல் கூட்டணி முறிந்தது. 2004 முதல் 2007 வரையிலான 3 ஆண்டுகளில் அரசியல் பதற்றம் உச்சத்துக்குச் சென்றது. நாளொன்று பிறந்தால் பொழுதொறு அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டு வந்தது.
 கர்நாடக அரசியல் மிகவும் தரம்தாழ்ந்துசென்றது இந்தக் காலக்கட்டத்தில் தான் என்பதால், மக்களிடையே அரசியல்வெறுப்புக்குவித்திட்டது. கர்நாடகத்தில் முதன்முறையாக தோன்றிய கூட்டணி அரசு மக்களின் முகம்சுளிக்கும்படிஅமைந்துவிட்டது.
 பாஜகவின் "ஆபரேஷன் கமலா'
 ஆட்சியை ஒப்படைக்கத் தவறியதை தொடர்ந்து, 2008-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பாவுக்கு ஆதரவான அலை உருவானதால், அறுதிப்பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாக 110 இடங்களில் பாஜக வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அப்போதுதான் 6 சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ராஜமரியாதை கிடைத்தது. 6-இல் 5 பேர் அமைச்சர்களாக்கப்பட்டனர்.
 ஆட்சியை பலப்படுத்தும் முகமாக, அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சரும், சுரங்கத் தொழிலதிபருமான ஜனார்தனரெட்டியின் ஆதரவில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தை புறம்தள்ளி 'ஆபரேஷன் கமலா' என்ற புதிய அரசியல் சூத்திரத்தை பாஜக அமல்படுத்தியது. காங்கிரஸ்,மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யவைத்து, அந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மீண்டும் அவர்களையே போட்டியிடவைத்து வெற்றிபெறவைப்பதுதான் 'ஆபரேஷன் கமலா' திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
 இதன்படி 17 எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்யவைத்து, இடைத்தேர்தலில் நிற்கவைத்துவெற்றிபெறவைத்து பாஜக ஆட்சியை அறுதிப்பெரும்பான்மையுள்ள அரசாக மாற்றிக்கொண்டனர். இது இந்திய அளவில் பாஜகவுக்கு அவப்பெயரைத் தேடித்தந்தது.
 பாஜக ஆட்சியில் உள்கட்சிபூசல் ஏற்பட்டதால், பி.எஸ்.எடியூரப்பாவால் 5 ஆண்டுகாலம் முதல்வராக நீடிக்கமுடியவில்லை. 3 ஆண்டு காலத்துக்குப் பின்னர் சதானந்தகெளடா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர்.
 வறட்சியைக் கவலைப்படாமல்...
 5 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு பிறகு 2013-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், சித்தராமையா தலைமையில் ஆட்சிஅமைத்தது. 5 ஆண்டுகாலம் எந்த உள்கட்சிபூசலும் இல்லாமல் பல்வேறு மக்கள் நலதிட்டங்களால் நல்லாட்சி நடப்பதாகப் பெயர் பெற்றது. ஆனாலும், 2018-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக 104 எம்எல்ஏக்களுடன் வென்ற பாஜகவை ஆட்சியை அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலா அழைத்ததால் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார்.
 பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் கால அவகாசம் கிடைத்திருந்தநிலையில், காங்கிரஸ் தொடர்ந்தவழக்கில் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா பதவியைத் துறந்தார்.
 இதைத் தொடர்ந்து மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் அமைந்துள்ளது. இந்த ஆட்சிக்கு எதிராகவே கிளர்ந்துள்ள மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆட்சியைக் கவிழ்க்க சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பாஜக துணையாக இருந்துவருகிறது.
 கடந்த 20 நாள்களாக கர்நாடகத்தில் அரங்கேறிவரும் அரசியல் விளையாட்டுகளை மக்கள் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாது, நமது அரசியல் கட்டமைப்பை நொந்துகொள்ள தொடங்கியுள்ளனர். மாநிலத்தில் கடுமையான வறட்சி வாட்டி வதைத்துவரும் நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அரசியல் சித்துவிளையாட்டுகளில் மஜத, காங்கிரஸ், மஜத ஈடுபட்டுவந்துள்ளதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைவதை தவிர வேறு எதையும்செய்யமுடியாத கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com