Enable Javscript for better performance
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது: கர்நாடக விவசாயிகள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது: கர்நாடக விவசாயிகள் மறியல்

    By DIN  |   Published on : 25th July 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து கர்நாடக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து கடந்த சில நாள்களாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. குறைந்த அளவில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தாலும், அதை கண்டித்து, கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மைசூரு மாவட்டம் டி.நரசிப்பூர் நகரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     ஹளே திருமாக்கூடலு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-212-இல் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டதால், அவ் வழியாக வாகன போக்குவரத்து முடங்கியது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீர்ப்பிடிப்புப் பகுதியான மைசூரு, மண்டியா மாவட்டங்களில் நிலுவைப்பயிருக்கே தண்ணீர் இல்லாமல் கர்நாடக விவசாயிகள் தத்தளிக்கும் நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது ஏன்? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
     போராட்டத்தின் போது கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்தகுமார் பேசியது:
     கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக உள்ளது. குடிநீர், பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தத்தளித்துள்ளனர். கபினி அணை இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.
     கர்நாடக விவசாயிகளின் நலனை மறந்துவிட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது எப்படி நியாயமாகும்? இதனிடையே, கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ளது.
     இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரமாக்குவோம். வட்ட அளவில் அனைத்து விவசாயிகளும் போராட்டத்தில் குதிப்போம் என்றார். இந்த போராட்டத்தால் மைசூரு-கொள்ளேகால்-சாமராஜ்நகர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai