Enable Javscript for better performance
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? எம்எல்ஏ என்.மகேஷ் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? எம்எல்ஏ என்.மகேஷ் விளக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mahesh

    கட்சி மேலிடத்துடன் தகவல் இடைவெளியால் கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கொள்ளேகால் எம்எல்ஏ என். மகேஷ் தெரிவித்தார்.
     கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ்,மஜத கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் கொள்ளேகால் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.மகேஷ் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, அவரை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டார்.
     இந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு எம்எல்ஏ மகேஷ் அளித்த பேட்டி: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்டது. மஜத 204 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் கொள்ளேகால் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நான் மட்டுமே வெற்றி பெற்றேன்.
     கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், அதில் ஒருவரும் வெற்றி பெறவில்லை. என்றாலும், மாநில அளவில் 4.12 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்குமாறு கட்சியின் மூத்த தலைவர் அசோக் சித்தார்த் அறிவுரை வழங்கினார்.
     அதனை தொடர்ந்து ஜூலை 15-ஆம் தேதி வரை தொகுதியில் இருந்தேன். ஜூலை 16-ஆம் தேதிக்குப் பிறகு செல்லிடப்பேசியை அணைத்துவிட்டு, தியான மையம் ஒன்றில் தங்கியிருந்தேன். இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, சுட்டுரையில் எனக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி ஆதரவு தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். சுட்டுரை பார்க்கும் பழக்கமில்லாததால், மாயாவதி எனக்கு அளித்த அறிவுரையை கவனிக்காமல் விட்டுள்ளேன்.
     தகவல் இடைவெளியால் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. புதன்கிழமை காலை பெங்களூருக்கு வந்த எனக்கு, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் கிடைத்தது. இதுகுறித்து கட்சியின் தலைவர் மாயாவதியுடன் பேசுவேன். தகவல் இடைவெளியால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பேன். நான் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்தான். இனியும் அக்கட்சியின் உறுப்பினராக தொடர்வேன். பாஜகவின் ஆபரேஷன் கமலா திட்டத்துக்கு நான் பலியாகவில்லை. தற்போது உள்ள அரசியல் சூழலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலையோடு இருப்பேன் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai