முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
தொழில்கல்விக்கான மாணவர் சேர்க்கை: நாளை முதல் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் சுற்று விருப்பப்பதிவு
By DIN | Published On : 30th July 2019 08:11 AM | Last Updated : 30th July 2019 08:11 AM | அ+அ அ- |

தொழில்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் சுற்று விருப்பப் பதிவு ஜூலை 31-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநிலத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொறியியல், கட்டடக் கலை, பண்ணை அறிவியல், தோட்டக் கலை, கால்நடை, மருந்தியல், ஆயுஷ் போன்ற தொழில்கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சேர்க்கை இடங்கள், மாணவர்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் சுற்று விருப்பப்பதிவு ஜூலை 31-ஆம் தேதி தொடங்குகிறது. கல்லூரிகளில் மீதமுள்ள சேர்க்கை இடங்கள், பாடப் பிரிவுகள் குறித்த விவரங்கள் www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் சுற்று விருப்பப்பதிவில் தகுதியான மாணவர்கள் விருப்ப கல்லூரிகள்,விருப்பப்பாடப்பிரிவுகள் குறித்தவிவரங்களை ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 6 மணி வரை www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கான சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 6 மணிமுதல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 6 முதல் 7-ஆம் தேதிவரை சேர்க்கையை உறுதி செய்யலாம். பின்னர், கட்டணங்களை செலுத்தலாம். சேர்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனடிப்படையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம். ஒருவேளை இந்தகாலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற தவறினால், சேர்க்கை ஆணை தானாக காலாவதி ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.