நகை வியாபாரி மாயம்: முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 12th June 2019 09:21 AM | Last Updated : 12th June 2019 09:21 AM | அ+அ அ- |

பெங்களூரில் நகை வியாபாரி மாயமானதால், அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வாங்கி கடனை திருப்பித் தராமல் பலர் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி, மாநகரக் காவல் ஆணையருக்கு ஒலிப்பேழை அனுப்பிவிட்டு பெங்களூரைச் சேர்ந்த நகை வியாபாரி மன்சூர்கான் மாயமானார். இதனால், அவரிடம் பணம் முதலீடு செய்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனிடையே, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முதல்வர் குமாரசாமி தனது சுட்டுரை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தனியார் ஆபரண மாளிகையில் முதலீடு செய்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். ஆபரண மாளிகையில் அதிபர் மன்சூர்கானுக்கு ரூ. 500 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் சுமார் 25 சொத்துகளை அடையாளம் கண்டுள்ளோம்.
மேலும் அவருக்கு சொந்தமான ஆபரணமாளிகையில் சுமார் ரூ. 400 கோடி மதிப்பிலான வைரம், தங்கம் உள்ளிட்ட நகைகள் இருப்பதும் தெரியவதுள்ளது. சொத்துகளையும், நகைகளையும் அரசு பறிமுதல் செய்து, முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட ஏழைகளை கண்டறிந்து அவர்கள் முதலீடு செய்த தொகையை வழங்க வேண்டும் என்றார்.