நகை வியாபாரி மோசடியில் எனக்கு தொடர்பில்லை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க்

பொதுமக்களின் முதலீடுகளை அபகரித்துக் கொண்டு நகை வியாபாரி தலைமறைவான விவகாரத்தில்

பொதுமக்களின் முதலீடுகளை அபகரித்துக் கொண்டு நகை வியாபாரி தலைமறைவான விவகாரத்தில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க் தெரிவித்தார்.
பெங்களூரு பத்திரிகையாளர் சங்கத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் உள்ள தனியார் ஆபரண மாளிகையின் அதிபர், முதலீடு செய்தவர்களிடம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். ஆனால், அவர் மாநகரக் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள ஒலிப்பேழையில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனக்கும், ஆபரண மாளிகையின் மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 
தனியார் மாளிகையில் முதலீடு செய்த பல அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இந்த மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு படையிடம் முதல்வர் குமாரசாமி விசாரணையை ஒப்படைத்துள்ளார். ஆனால், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும். அப்போதுதான் ஆபரணமாளிகையின் அதிபர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க முடியும். 
நான் அரசியல் செய்வதைவிட சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்டவன். எனவே, எனது தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை செய்யவே விரும்புகிறேன். தனியார் ஆபரணமாளிகையில் மோசடியில் நானோ எனது குடும்பமோ, உறவினர்களோ, நண்பர்களோ ஈடுபடவில்லை. எனவே, இதுதொடர்பான விசாரணைக்கு தேவையான முழு ஒத்துழைப்பை வழங்குவேன். இந்த விவகாரம் குறித்து முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து எனது விளக்கத்தை கூறுவேன் என்றார்.
நகை வியாபாரியிடம் கடன் வாங்கவில்லை: ஆபரண மாளிகை அதிபருக்கு எனது சொத்தை விற்றதன் பேரிலே தொடர்பு இருந்ததாக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.
அண்மையில் பெங்களூரில் உள்ள தனியார் ஆபரண மாளிகையின் அதிபர் மன்சூர்கான், ஒலிப்பேழையில் தன்னிடம் கடன் வாங்கிய பலர் கடனை திருப்பித்தராததால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு தலைமறைவானார். அதில் சில அரசியல்வாதிகளின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் ஜமீர் அகமதுகானும், மன்சூர்கானிடம் ரூ. 5 கோடி கடன் வாங்கியுள்ளார் என செய்தி பரவியதையடுத்து, புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு ஜமீர் அகமதுகான் அளித்த விளக்கம்: 
தனியார் ஆபரண மாளிகையின் அதிபர் மன்சூர்கானிடம் நான் கடன் ஏதுவும் வாங்கவில்லை. 2017-ஆம் ஆண்டு முதல்முறையாக அவரை சந்திக்க நேர்ந்தது. அதைத்தொடர்ந்து ரிச்மன்ட்டவுனில் உள்ள எனது சொத்தை அவர் விலைக்கு வாங்க விரும்பினார். நானும் அதனை விற்கும் முடிவில் இருந்ததால், பேச்சுவார்த்தைக்கு பிறகு அதனை 9.36 கோடிக்கு விற்பனை செய்ய முடிவானது. 
முன்பணமாக ரூ. 5 கோடியும், பத்திரப்பதிவின் போது ரூ. 4.36 கோடியும் வழங்கப்பட்டது. அதற்கான அனைத்து ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இதை தவிர அவரிடம் வேறு எந்த பணமும் நான் வாங்கவில்லை. அவரை நான்கைந்து முறைக்கு மேல் நான் சந்திக்கவில்லை
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com