சுடச்சுட

  

  கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 3 அமைச்சர்களை நியமிக்க முதல்வர் குமாரசாமி முடிவு

  By DIN  |   Published on : 14th June 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி, அமைச்சரவையில் காலியாக உள்ள 3  இடங்களை நிரப்ப முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
  கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-  மஜத கூட்டணி ஆட்சி  நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசு பதவியேற்றவுடன் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தி அடைந்து, கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். சிலர் பாஜகவுக்குச் செல்லவும் முடிவு செய்து,  அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வந்தனர்.  இதில்,  முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி முக்கியமானவர்.
  இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானவுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள்,  காங்கிரஸ் மூத்தத் தலைவர்களை அமைச்சர் பதவிக் கேட்டு நெருக்கத் தொடங்கினர்.  மறுத்தால், கட்சி மாறுவதாகவும் மறைமுகமாக மிரட்டலும் விடுத்தனர். 
  கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களுக்கு அமைச்சர் பதவியை தருமாறு, முதல்வர் குமாரசாமியையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களைக் கேட்டு
  வந்தனர். 
  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாஜகவும், சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை ஆபரேஷன் கமலா திட்டத்தில் தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டது.
  பாஜகவின் திட்டத்தை முறியடிக்க முதல்வர் குமாரசாமி  சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்து, அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில், அவர் வெற்றி பெற்ற நிலையில், கடந்த ஜூன் 12-இல் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.  இதற்காக ஆளுநரிடம் முதல்வர் குமாரசாமி அனுமதியும் பெற்றிருந்தார். 
  இந்த நிலையில் ஞானபீட விருது பெற்ற கிரீஷ் கார்னாட் இறந்ததையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. 
  2 சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி?
  காலியாக உள்ள 3 இடங்களுக்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் சங்கர் மற்றும் நாகேஷிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள ஒரு இடத்துக்கு மஜதவைச் சேர்ந்த எம்எல்சி ஃபாரூக் அல்லது மஜத மாநில தலைவர் பதவியை ராஜிநாமா செய்யக் கடிதம் கொடுத்துள்ள எச்.விஸ்வநாத் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
  காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் அதிருப்தி?
  அமைச்சராகப் பதவி ஏற்பவர்களின் பெயர்களை வெளியிட்டால், பதவி கிடைக்காத காங்கிரஸ், மஜத  எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தக் கூடும் என்ற காரணத்தால், வியாழக்கிழமை நள்ளிரவு, அல்லது வெள்ளிக்கிழமை காலை பெயர்களை வெளியிட முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். 
  மொத்தத்தில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்றும் கூட்டணி அரசு ஆட்டம் காணுவது உறுதி என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
  முதல்வர் குமாரசாமியின் நடவடிக்கைகளை பாஜக கூர்மையாக கவனித்து வருகிறது. வாய்ப்பு கிடைக்காத காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து, கூட்டணி அரசின் அறுதிப் பெரும்பான்மை குறையும் பட்சத்தில், ஆளுநரின் ஆட்சி அமைக்க உரிமை கோரவும் பாஜக முடிவு செய்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தால், கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ராஜ்பவன் சாலையில் இன்று  போக்குவரத்தில் மாற்றம்
  கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி,  ராஜ்பவன் சாலையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  இது குறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
  கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பெங்களூரு ராஜ்பவன் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறுகிறது.
  நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதால், ராஜ்பவன் சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  இதன்படி, பிற்பகல் 1 மணி முதல் ராஜ்பவன் சாலை, சி.ஓ.டி. சதுக்கம் வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் திம்மய்யா சதுக்கத்துக்குச் செல்லும் வாகனங்கள் காபி வாரியம், பாலேகுந்திரி சதுக்கம், கன்னிகாம் சாலை வழியாகச் செல்ல வேண்டும். 
  இதேபோல், இன்பேன்டரி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கல்பனா சதுக்கம், கன்னிகாம் சாலை, சந்திரிகா சதுக்கம், மில்லர்ஸ் சாலை, அலிஅஸ்கார் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
  அமைச்சரவை விரிவாக்கத்தையொட்டி , அம்பேத்கர் சாலை, பாலேகுந்திரி சதுக்கம், ராஜ்பவன் சாலை, சி.ஓ.டி. சதுக்கம், குயின்ஸ் சாலை, அரண்மனை சாலை, மைசூரு வங்கி சதுக்கம் முதல் கல்பனா சதுக்கம் வரை, கப்பன் பூங்கா, மில்லர்ஸ் சாலை, இன்பேன்டரி சாலை, அலி அஸ்கார் சாலை, பழைய அஞ்சல் அலுவலகச் சாலை, மைசூரு வங்கி சதுக்கம் முதல் கே.ஆர்.சதுக்கம் வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai