ஆபரண மாளிகை மோசடி வழக்கு: 7 இயக்குநர்களிடம் விசாரணை
By DIN | Published On : 14th June 2019 10:31 AM | Last Updated : 14th June 2019 10:31 AM | அ+அ அ- |

தனியார் ஆபரண மாளிகை மோசடி வழக்கு தொடர்பாக, அதன் 7 இயக்குநர்களிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு சிவாஜி நகர் தொகுதியில் உள்ள தனியார் ஆபரண மாளிகை உரிமையாளர், முதலீடு செய்தவர்களிடம் பண மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதுதொடர்பாக சுமார் 27 ஆயிரம் பேர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மோசடியை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையினருக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக ஆபரண மாளிகையில் இயக்குநர்கள் நிஜாமுதீன்கான், நசீர்ஹுசேன், நவீத் அகமது, அர்ஷத்கான், அன்சர்பாஷா, வாசீம், தாதாபீர் ஆகிய 7 பேரிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தனியார் ஆபரண மாளிகையில் பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, கோலார் உள்ளிட்ட கர்நாடகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ்நாடு, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேந்தவர்களும் முதலீடு செய்துள்ளது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.