மஜதவுடனான கூட்டணியால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி
By DIN | Published On : 23rd June 2019 03:33 AM | Last Updated : 23rd June 2019 03:33 AM | அ+அ அ- |

மஜதவுடனான கூட்டணியால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.
இதுகுறித்து சிக்பளாப்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், காங்கிரஸ் மோசமான தோல்வி அடைந்தது. மஜத கூட்டணியால் ஒருபக்கம் தோல்வி என்றால், மறுபக்கம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்விக்கு குறிப்பாக எனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினரே காரணமாகிவிட்டனர்.
மஜதவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால் காங்கிரஸுக்கு குறைந்தது 15-16 இடங்கள் கிடைத்திருக்கும். கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் சிக்பளாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தேன். இம்முறை மஜதவுடன் கூட்டணி அமைத்து தோல்வியைக் கண்டேன். இத்தொகுதி மக்கள் 2 முறை என்னை எம்.பி.யாக்கி மக்களவைக்கு அனுப்பியிருந்தனர். அதனால் இத்தொகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா? இல்லையா? என்பதுதெரியவில்லை. ஆனால், தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றுள் குடிநீர் பிரச்னை முக்கியமானது. எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து முயற்சிப்பேன். தேர்தல் தோல்வியால் எனது ஊக்கத்தை நான் இழக்கவில்லை.
சட்டப்பேரவைக்கு இடைக்கால தேர்தல் நடக்கும் என்பதை ஏற்க எந்தக் கட்சி எம்.எல்.ஏ.வும் தயாராக இல்லை என்றார் அவர்.