மைசூரில் ரூ.200 கோடியில் அறிவியல் நகரம்
By DIN | Published On : 25th June 2019 09:30 AM | Last Updated : 25th June 2019 09:30 AM | அ+அ அ- |

மைசூரு அருகே ரூ. 200 கோடி செலவில் அறிவியல் நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
மைசூரில் அறிவியல் நகரம் அமைய உள்ள இடத்தை அவர் திங்கள்கிழமை ஆய்வு செய்தவுடன், செய்தியாளர்களிடம் கூறியது:-
மைசூரு மாவட்டத்துக்குள்பட்ட சுத்தூர் மடத்தின் அருகே சுமார் 24 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ. 200 கோடி செலவில் அறிவியல் நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் நகரம் அமைக்க தேவையான 24 ஏக்கர் நிலத்தை வழங்க சுத்தூர் மடத்தினர் ஒப்புக் கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளோம்.
அறிவியல் நகரம் உருவானால், தேசிய அளவில் மைசூருக்குச் சிறப்பான இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 16 மாவட்டங்களில் அறிவியல் நகரம் தொடங்கப்படும்.
மங்களூரு, தாவணகெரேயில் அறிவியல் நகரம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அறிவியல் நகரம் அமைக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் 3 ஆண்டுகளிலேயே அதற்கான பணிகள் நிறைவடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பரமேஸ்வர்.