தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க தமிழர் பாதுகாப்புக் குழு அமைக்க முடிவு

கர்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க தமிழர் பாதுகாப்புக்  குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க தமிழர் பாதுகாப்புக்  குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில்ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பெங்களூரு தமிழ்ச்சங்கச் செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் கோ.கருணாநிதி, துணைச் செயலாளர்கள் அமுதபாண்டியன், இல.பழனி, செயற்குழு உறுப்பினர்கள் ராமசந்திரன், சுரேஷ்குமார், சரவணன், கர்நாடக ஹிந்து நாடார் சங்க நிறுவனர் பாலசுந்தரம், கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.இராசன், கர்நாடகத் தமிழர் கட்சித் தலைவர் ஆதிசத்யன், தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தமிழடியான், திராவிடர்விடுதலைக் கழகத்தின் டி.கே.குமார்,  நாம் தமிழர் கட்சியின் பூவேந்தன்,  சக்திவேல்,  மகிழவன், ஆதர்ஷ் ஆட்டோ தொழிற்சங்கத் தலைவர் சி.சம்பத், ரஜினி சேவைமன்றத் தலைவர் ரஜினிமுருகன்,  கர்நாடக தமிழ் கிறிஸ்துவ முன்னணியின் எம்.சகாயராஜ், ஏ.ஆரோக்கியதாஸ், தமிழார்வலர்கள் மு.புண்ணியமூர்த்தி, மு.கோபாலகிருஷ்ணன், ந.தமிழ்மறவன், ப.மூர்த்தி, சாந்தகுமார், மதலைமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
     இந்த கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகள் தெரிவித்தனர்.  பெங்களூரு, விவேக் நகரில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் தமிழில் திருப்பலி நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  மிரட்டல் விடுத்திருந்த கன்னட அமைப்பின் செயலை இக் கூட்டத்தில் பலரும் வன்மையாக கண்டித்தனர். கர்நாடகத் தமிழர்கள், குறிப்பாக பெங்களூரில் உள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் மொழிசார் சீண்டல்கள் தொடர்பாக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர், இக் கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் குறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செய்தியாளர்களிடம் கூறியது: குழந்தை இயேசு தேவாலயத்தில் தமிழில் திருப்பலி நடத்துவதற்கு கன்னட அமைப்பினர் சிலர் மிரட்டல் விடுத்துள்ளதை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.  தேவாலயத்தில் தகராறு செய்த கன்னட அமைப்பினரைக் கைதுசெய்து,  சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.  பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி முதல்வர்,  உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள்.  இங்குள்ள தமிழர்கள் வந்தேறிகள் அல்ல,  கர்நாடகத்தின் பூர்வகுடிகள். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழர்களின் மொழி உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள போராட வேண்டிய நிலை உள்ளது. மொழி சிறுபான்மையினரான தமிழர்களின் சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது குறித்து விவாதித்து முடிவெடுப்போம்.  கர்நாடகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணப்பட வேண்டும். மொழி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலனுக்கு மத்திய அரசில் தனித்துறை இருப்பது போல,  இந்திய மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு, தனித் துறை தொடங்க வேண்டும்.  இதை வலியுறுத்தி தமிழக முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.  
மேலும், கர்நாடகத் தமிழர்களின் மொழி, சமூக, பொருளாதார, அரசியல், கல்வி,  வழிபாட்டு உரிமைகளை தற்காத்துக் கொள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து 'தமிழர் பாதுகாப்புக் குழு'வை தொடங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த குழுவில் எல்லா தமிழ் அமைப்புகளும் உறுப்பு அமைப்புகளாக இணையலாம்.  இந்த குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து,  அடுத்தடுத்து கூட்டம் நடத்தி முடிவு செய்வோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com