பெங்களூரு மத்திய மக்களவை தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு யாருக்கு?

பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகிறது

பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற ஆர்வம் அத் தொகுதி காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.
பெங்களூரில், பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு ஆகிய 2 மக்களவை தொகுதிகள் மட்டுமே இருந்தன. 2008-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்தபோது, பெங்களூரு வடக்கு தொகுதியில் இருந்து புதிதாக பெங்களூரு மத்திய தொகுதி உருவாக்கப்பட்டது.  அதற்கு முன்பு பெங்களூரு வடக்கு தொகுதி ஒருசில ஆண்டுகளைத் தவிர, காங்கிரஸ் வசமே இருந்தது.  2009, 2014-ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பி.சி.மோகன் வெற்றிபெற்றிருக்கிறார்.  இத்தொகுதியில் தமிழர்கள்,  முஸ்லிம்கள் பெருவாரியாக  வசிக்கும் தொகுதியாகும்.  அதற்கடுத்தபடியாக தெலுங்கர்கள், கன்னடர்கள் இருக்கிறார்கள்.  
    பாஜக வேட்பாளராக இம்முறையும் பி.சி.மோகன் நிறுத்தப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், காங்கிரஸ் கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.  இத் தொகுதியை பாஜகவிடம் இருந்து கைப்பற்ற தீவிரம் காட்டும் காங்கிரஸ்,  நல்ல வேட்பாளரை நிறுத்த ஆராய்ந்துவருகிறது.  2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு 1.37 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ரிஸ்வான் அர்ஷத்,  தற்போது எம்எல்சியாக பதவி வகித்துவருகிறார். ஆனாலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். 
இதனிடையே, முன்னாள் எம்.பி.க்கள் எச்.டி.சாங்கிலியானா, சலீம் அகமது, எம்எல்ஏ ரோஷன்பெய்க், மாநிலங்களவை எம்.பி பி.கே.ஹரிபிரசாத் ஆகியோரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் இருந்து போட்டியிடவிருப்பம் தெரிவித்துள்ளனர்.  பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் அதிகம் வசித்தபோதும்,  இத்தொகுதியில் 2 முறையும் முஸ்லிம் ஒருவருக்கே வேட்பாளராகும் வாய்ப்பு தரப்படுவது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.  பெங்களூரு மத்திய தொகுதிக்குட்பட்ட சிவாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியில் நீண்ட காலமாக எம்எல்ஏவாக இருப்பதால், இத் தொகுதிமக்களிடையே நல்ல தொடர்பை வளர்த்துவைத்துள்ளதால், எனக்கு வேட்பாளராகும் வாய்ப்பை தர வேண்டும் என்று ரோஷன் பெய்க் வாதிடுகிறார்.  தேர்தலில் தோற்றாலும், தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களைச் சந்தித்துவருகிறேன் என்கிறார் ரிஸ்வான் அர்ஷத்.
பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சர்வக்ஞநகர், சிவாஜிநகர், சாந்திநகர், காந்தி நகர், சாமராஜ்பேட் ஆகியவை காங்கிரஸ்வசமும், சி.வி.ராமன்நகர்,  ராஜாஜிநகர், மகாதேவபுரா பாஜக வசமும் உள்ளன. 
இந்த தொகுதியில் இருந்து தேர்தலைச் சந்திக்க பி.கே.ஹரிபிரசாத் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  நாடாளுமன்றத்தில் சிறந்த வாதங்களில் ஈடுபட்டுள்ள பி.கே.ஹரிபிரசாத், இத் தொகுதியை இம் முறை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்கிறார்.  அவர் மேலும் கூறுகையில்,"பெங்களூரில் உள்ள பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு ஊரகத் தொகுதிகளை முறையே முஸ்லிம், பிராமணர், பிற்படுத்தப்பட்டோர், ஒக்கலிகர்களுக்கு வழங்க வேண்டுமென்பது என் கருத்தாகும்.  அப்போதுதான் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும்." என்கிறார்.
பாஜக வேட்பாளராக மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கும் பி.சி.மோகன்," அதிக வாக்கு வித்தியாசத்தில் இம் முறையும் வெற்றிபெறுவேன். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் மக்களுக்கு திருப்தி தந்துள்ளன. புறநகர் ரயில் திட்டத்தை செயல்படுத்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.  அது தற்போது அமலுக்கு வரவிருக்கிறது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com