குறைந்தபட்ச வருவாய்த் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க பாஜகவிடம் வலியுறுத்தல்

குறைந்தபட்ச வருவாய்த் திட்டத்தை மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு பாஜகவுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச வருவாய்த் திட்டத்தை மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு பாஜகவுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலின்போது பாஜகவின் வாக்குறுதிகளை மக்கள் முன் வைப்பதற்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அங்கம் வகிக்கும் பாஜக எம்பி ராஜீவ்சந்திரசேகர், தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுவருகிறார். 
மக்களின் கருத்தறிந்து, அவர்களின் எண்ணப்படி தேர்தல் அறிக்கையை வடிவமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆங்காங்கே நடந்த ஆய்வுக்கூட்டங்களில், குறைந்தபட்ச அடிப்படை வருவாய்த் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டுமென பாஜகவுக்குபொதுமக்கள் பலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். 
இதுகுறித்து ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில்,"அடிமட்டத்தில் பல்வேறு தரப்பினரிடம் நடத்திய கலந்துரையாடலின்போது, பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கு ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், குறைந்தபட்ச அடிப்படைவருவாய்த் திட்டத்தை அமல்படுத்துமாறும் ஒருசிலர் கேட்டுக்கொண்டுள்ளனர். எனினும், இது குறித்து ஆராய்ந்து, கட்சி இறுதி முடிவெடுக்கும். அரசு ஊழியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ராஜ்நாத்சிங் தலைமையில் அமைந்துள்ள பாஜக தேர்தல் அறிக்கைக்குழு அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்கும்' என்றார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச அடிப்படை வருவாய்த் திட்டத்தை அமல்படுத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இது பொது அடிப்படை வருவாய்த் திட்டத்தில் எடுக்கப்பட்ட யோசனையாகும். ஏழைகள் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்து கொள்வதற்கு குறைந்தபட்ச ரொக்கம் வழங்கலாம் என்று 2016-17-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அய்வறிக்கையில் அப்போதைய மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
வறுமையை ஒழிக்க, தனிமனிதனுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவுசெய்யும் நோக்கில், குறிப்பிட்ட வருவாயை நிர்ணயிக்க இந்த திட்டம் அறிவுறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com