தேவெ கெளடா போட்டியிடாவிட்டால் தும்கூரை காங்கிரஸுக்கு விட்டுத்தர மஜத முன்வர வேண்டும்

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா போட்டியிடாவிட்டால், தும்கூரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு மஜத

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா போட்டியிடாவிட்டால், தும்கூரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு மஜத விட்டுத்தர வேண்டும் என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கேட்டுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வடகன்னடம், சிக்மகளூரு, சிவமொக்கா, தும்கூரு, ஹாசன், மண்டியா, பெங்களூரு வடக்கு, விஜயபுரா ஆகிய 8 தொகுதிகளை மஜதவுக்கு காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் வகிக்கும் தொகுதிகளை மஜதவுக்கு விட்டுத்தரக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள், கட்சிமேலிடத்திடம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், காங்கிரஸ் எம்பியாக உள்ள முத்தனுமே கெளடாவின் தும்கூரு தொகுதியை மஜதவுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸில் அதிருப்திக்கு காரணமாகியுள்ளது. தனது தும்கூரு மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியை மஜதவுக்கு ஒதுக்கியுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், அத்தொகுதியை மீண்டும் பெற தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூரில் வியாழக்கிழமை இரவு 10.15மணிக்கு முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா, வெள்ளிக்கிழமை காலை 10.30மணிக்கு முதல்வர் குமாரசாமி, அதன்பின்னர் மக்களவை காங்கிரஸ் குழுத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தும்கூரு தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டார். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா போட்டியிடாத நிலையில், தும்கூரு தொகுதியை மஜத காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜி.பரமேஸ்வர், கூறியது: தும்கூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா போட்டியிட்டால், எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஒருவேளை தேவெகெளடா போட்டியிடாவிட்டால், தும்கூரு தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தரவேண்டும் என்று மஜத தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன். 
கர்நாடகத்தில் தற்போது எம்பியாக இருக்கும் 10 பேருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கட்சியின் தேர்தல் ஆய்வுக்குழுவில் தெரிவித்திருந்தோம். ஆனால், தேவெ கெளடா மற்றும் ராகுல் காந்தி இடையிலான பேச்சுவார்த்தையில் தும்கூரு மஜதவுக்கு ஒதுக்கப்பட்டது. 
இந்த தொகுதியை விட்டுத்தருவது தொடர்பாக தேவெ கெளடா, குமாரசாமியிடம் பேசியிருக்கிறோம். நல்லமுடிவு கிடைக்கும் என்று கருதுகிறேன். அவசியம் ஏற்பட்டால் கட்சி மேலிடத்திடம் பேசவும் தயாராக இருக்கிறேன். ஒருவேளை தேவெ கெளடாவே போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு நாங்கள் உழைக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
இதனிடையே, தும்கூரு தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கே.என்.ராஜண்ணா சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியது:இந்தவிவகாரம் குறித்து கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் பேசுவேன் என்றார்.
எம்பி முத்தனுமே கெளடா கூறுகையில்,"தும்கூரு தொகுதியில் தேவெ கெளடா போட்டியிட்டால் பிரச்னையில்லை. ஆனால், அவர் போட்டியிடாத நிலையில், தும்கூரு தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க மஜத தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்' என்றார். 
தேவெகெளடா, தும்கூரு, பெங்களூரு வடக்கு தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com