தென் பெங்களூரு தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.எம்.கிருஷ்ணா போட்டி?

தென் பெங்களூரு தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தென் பெங்களூரு தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரின் முக்கியமான தொகுதிகளில் தென் பெங்களூரு ஒன்று. இத்தொகுதியில் 1996-ஆம் ஆண்டு முதல் 6 முறை தொடர்ச்சியாக பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தவர் அனந்த்குமார். இவர், அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி அரசில் மத்திய அமைச்சராக பணியாற்றியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனந்த்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் அவரது மனைவி தேஜஸ்வினி நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென் பெங்களூரு தொகுதியில் தேஜஸ்வினியை நிறுத்த ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், முன்னாள் அமைச்சர் வி.சோமண்ணா ஆகியோர் பின்னர், தேஜஸ்வினிக்கு ஆதரவு தெரிவித்து, அவரை வேட்பாளராக அறிவிக்கக் கோரி உயர்நிலைக்குழுவுக்கு பரிந்துரைத்திருந்தனர். இதனடிப்படையில், பாஜக மத்திய தேர்தல் குழுவுக்கும் தேஜஸ்வினி பெயரை மாநில பாஜக பரிந்துரை செய்திருந்தது. தேஜஸ்வினி தான் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்ததால், அவரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தொடங்கினார். தென் பெங்களூரு தொகுதியில் உள்ள முக்கிய நபர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும், பாஜக செயல்வீரர் கூட்டங்களையும் நடத்தினார்.
இந்நிலையில், பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தென் பெங்களூரு தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது தென் பெங்களூரு தொகுதி பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின்னணியில் பாஜக தேசிய இணை பொதுச் செயலர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
தென் பெங்களூரு தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்ற அனந்த்குமார், எடியூரப்பாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தபோதும் வேறு யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில், அவரது மனைவி தேஜஸ்வினியை தேர்தலில் நிறுத்த வாய்ப்பளித்து, அவரும் அனந்த்குமாரை போல ஆளுமை நிறைந்தவராக உயர்ந்துவிட்டால், தனக்கு அரசியல் வளர்ச்சியே இல்லாமல் போய்விடும் என்று கருதி தான் தேஜஸ்வினியின் பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்து பி.எல்.சந்தோஷ் நிறுத்திவைத்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமான பி.எல்.சந்தோஷ், தென் பெங்களூரு வேட்பாளராக தன்னையே அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒருவேளை தனக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பை தரலாம் என்று பி.எல்.சந்தோஷ் கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் தேர்தலில் போட்டியிட விரும்பாத நிலையில், அனந்த்குமாரும் இல்லாத நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற அரசியல் ஞானம் படைத்தவர்கள் நாடாளுமன்றத்தில் தேவைப்படுவதாக கட்சித் தலைமை கருதுகிறது. இதன் காரணமாக, வாதத்திறமை கொண்ட பி.எல்.சந்தோஷ் அல்லது எஸ்.எம்.கிருஷ்ணாவை தென் பெங்களூரு தொகுதியில் களமிறக்க கட்சி யோசித்து வருவதால் தான் தேஜஸ்வினி பெயரை கடைசிநேரத்தில் கைவிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை தனக்கு வாய்ப்பு கிடைத்தால், எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியில் தன்னை வளர்த்துக்கொள்ள முடியும் என்று பி.எல்.சந்தோஷ் கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தமுறையும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து பிரதமராக மோடி பதவியேற்றால், மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவிலும் பி.எல்.சந்தோஷ் இருக்கிறார். எனினும், எஸ்.எம்.கிருஷ்ணாவை நிறுத்தி அனந்த்குமாரின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராமணர்கள், ஒக்கலிகர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா எளிதில் வெற்றிபெறுவார் என்று பாஜக எதிர்பார்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com