பிரதமர் மோடி வரலாற்று திரைப்படம்: திரையிடுவதற்கு முன் தேர்தல் ஆணையம் பார்வையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
By DIN | Published On : 24th March 2019 05:55 AM | Last Updated : 24th March 2019 05:55 AM | அ+அ அ- |

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை திரையிடுவதற்கு முன், தேர்தல் ஆணையம் பார்வையிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சந்தீப்சிங் தயாரிப்பில், ஓமுங்குமார் இயக்கத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாக்கப்பட்டு, ஏப்.5-ஆம் தேதி நாடு முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், இத் திரைப்படத்தை திரையரங்களில் திரையிடுவதற்கு முன்பாக அந்த படத்தை தேர்தல் ஆணையம் பார்வையிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளனவா? நடுநிலையாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்துமா? என்பதை ஆராய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கர்நாடக காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான மனுவை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் வழியாக தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி செயலர் ஏ.என்.நடராஜ் கெளடா, துணைத் தலைவர் எஸ்.ஏ.அகமது, சட்டப் பிரிவுச் செயலர் சூர்யாமுகுந்த்ராஜ் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை அளித்துள்ளனர்.
அந்த மனுவில், பல கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் ஏப். 11-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், ஏப். 5-ஆம் தேதி பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. பிரதமர் மோடி சார்ந்திருக்கும் பாஜக, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இப் படம் வெளியிடப்படும் காலம் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. இத் திரைப்படம் தொடர்பாக வெளியிட்டுள்ள முன்னோட்டக் காட்சிகள் ஆயுதங்களையும், வன்முறையையும் உயர்த்திப் பேசுவதாக அமைந்துள்ளன. எனவே, இத் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பு அதைப் பார்வையிட வேண்டும். மேலும், படத்தை முன்கூட்டியே பார்வையிடவும், அதுதொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிக்கவும் அரசியல் கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் முதல்கட்ட தேர்தல் தொடங்கப்பட்ட பிறகு ஏப்.12-ஆம் தேதிதிரையிட ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.