மக்களவைக்கு 14 பெண்களை மட்டுமே அனுப்பியுள்ள கர்நாடகம்
By ந.முத்துமணி | Published On : 24th March 2019 05:52 AM | Last Updated : 24th March 2019 05:52 AM | அ+அ அ- |

1952-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுள்ள மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து வெறும் 14 பெண்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.
1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் இருந்து இதுவரை 15 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இத் தேர்தல்களில் போட்டியிட்ட பெண்கள் குறைவென்றாலும், வெற்றிபெற்றவர்கள் வெறும் 14 பேர் மட்டுமே என்பது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது நடைபெற இருக்கும் 16-ஆவது மக்களவைக்கான தேர்தலிலும் ஒருசில பெண்களே தேர்தல் களத்தில் உள்ளனர்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தற்போதைய கர்நாடகம், அன்றைய பிரிக்கப்படாத மைசூரு மாநிலத்தின் அங்கமாக இருந்தது. அந்த தேர்தலில் மைசூரு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி. சரோஜினி மஹிஷி. இவர், தார்வாட் தொகுதியில் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கர்நாடகத்தில் இருந்து மக்களவைக்கு தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக பதவிவகித்த பெருமையும் சரோஜினி மஹிஷிக்கே உண்டு. 1978-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் இந்திரா காந்தி, 1999-இல் அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் போட்டியிட்டனர். அவசரநிலை பிரகடனத்துக்கு பிறகு 1977-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ராஜ்நாராயண் 55,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து, 1978-இல் சிக்மகளூரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர் வீரேந்திர பாட்டீலை எதிர்த்து இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் மறுவாழ்வுக்கு உதவியாக இருந்தது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேபோல, 1999-இல் பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில் பெல்லாரி தவிர, அமேதியிலும் சோனியா காந்தி போட்டியிட்டு இரு தொகுதியிலும் வென்றார்.
வட இந்தியாவை போல பெரிய அளவிலான பெண் தலைவர்கள் யாரும் கர்நாடகத்தில் போட்டியிடுவதில்லை. 2004-இல் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவை அப்போதைய கனகபுரா தொகுதியில் (இன்றைக்கு ஊரக பெங்களூரு தொகுதி) காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர் தேஜஸ்வினி கெளடா. இவர்களை விட்டால், சமூக மதிப்புக்கொண்ட பெண்கள் யாரும் கர்நாடகத்தில் போட்டியிட்டதில்லை.
இதுகுறித்து தற்போது பாஜகவில் எம்.எல்.சி.யாக இருக்கும் தேஜஸ்வினி கெளடா கூறுகையில், அரசியல் குடும்பப் பின்னணி கொண்ட பெண்களாக இருந்தால், தேர்தலில் போட்டியிட எளிதில் வாய்ப்பு கிடைக்கும். எந்தக் கட்சியாக இருந்தாலும்,தேர்தலில் நிறுத்துவதற்கு வெற்றிவாய்ப்பை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்கிறார்கள். இன்றைக்கும் அரசியல் ஆண்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளது. அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் என்கிறார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவில் இருந்து தேஜஸ்வினி அனந்த்குமார், ஷோபா கரந்தலஜே ஆகியோர் களத்தில் இறக்கப்படுகிறார்கள். நடிகை சுமலதா, சுயேச்சையாக மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை சுமலதா, முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலை எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. செளம்யா ரெட்டி கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு கர்நாடகத்தில் அமலில் உள்ளது. இதனால் அதிக பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய பெண்கள் வென்று நல்ல நிர்வாகத்தை அளித்து வருகிறார்கள். எனவே, சட்டப்பேரவை மற்றும் மக்களவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி, அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்கள் சட்டப்பேரவை, மக்களவையில் அதிக எண்ணிக்கையில் கால் பதிக்க இயலும் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், அரசியல் என்பது கல்வி மற்றும் நல்ல தோற்றம்சார்ந்த ஆளுமை சம்பந்தப்பட்டது அல்ல. அது தோள்பலம் மற்றும் பணபலம் சார்ந்தது. இது போன்ற கட்டமைப்பில் பெண்களால் தாக்குபிடிக்க முடிவதில்லை.
கடந்த ஆண்டுகளில் இந்தநிலை மாறியுள்ளது என்றாலும், எதிர்காலத்தில் பெண்களுக்கு சாதகமான மாற்றங்கள் நிகழலாம் என்றார்.