மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற பாஜக சரியாக திட்டமிட்டுள்ளது

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பாஜக சரியாக திட்டமிட்டுள்ளது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏ.ராமதாஸ் தெரிவித்தார்.


மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பாஜக சரியாக திட்டமிட்டுள்ளது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஏ.ராமதாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 51 சதவீத வாக்குகளை பெற பாஜக வியூகம் அமைத்துள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் இதுவரை மும்முனைப் போட்டி இருக்கும். இம்முறை இருமுனைப் போட்டி மட்டுமே உள்ளது. மைசூரில் பாஜக தீவிரமாக பிரசாரம் செய்யும். மேலும், மத்திய பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை கூறி வாக்குகளை திரட்டுவோம். மக்களவைத் தேர்தலை பாஜக சவாலாகவே எடுத்துக் கொண்டுள்ளது.
மைசூரு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரதாப் சிம்ஹா, கட்சியின் மூத்த தலைவர்களின் முன்னிலையில் மார்ச் 25-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். 
பாஜகவில் எம்.எல்.ஏ, எம்.எல்.சி, அமைச்சர் பதவிகளை அனுபவித்த ஒருவர் (சி.எச்.விஜயசங்கர்) காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது. மைசூரு தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதாப் சிம்ஹா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். மதத்தின் அடிப்படையில் வாக்குகளை கேட்பதற்கு பதிலாக இந்தியாவுக்கா? இத்தாலிக்கா? உங்கள் வாக்கு என்று பிரசாரத்தில் பொதுமக்களை கேட்போம்.
1996-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 32 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இது 2004-இல் 33 சதவீதமாகவும், 2009-இல் 34 சதவீதமாகவும், 2014-இல் 43 சதவீதமாகவும் உயர்ந்திருந்தது. தற்போது 51 சதவீத வாக்குகளை பெறுவோம் என்றார் அவர். கட்சியின் செய்தி தொடர்பாளர் வாமனாச்சார்யா கூறியது: நாடுமுழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. அதேபோல, மைசூரு தொகுதியில் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஆதரவாக உள்ளனர். காங்கிரஸ்-மஜத கூட்டணி பாஜகவுக்கு சாதகமாக அமையப்போகிறது. மைசூரில் பாஜகவின் அமைப்பு வலுவாக வளர்ந்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com