Enable Javscript for better performance
தேவெ கெளடாவுக்கு எதிராக களமிறங்கும் காங்கிரஸ் எம்.பி.: காங்கிரஸ் சமரச முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    தேவெ கெளடாவுக்கு எதிராக களமிறங்கும் காங்கிரஸ் எம்.பி.: காங்கிரஸ் சமரச முயற்சி

    By DIN  |   Published on : 28th March 2019 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தும்கூரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவுக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்பி முத்தேஹனுமே கெளடாவை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    தும்கூரு தொகுதியில் 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்தேஹனுமே கெளடா.  காங்கிரஸ்- மஜத கூட்டணி அமைத்து, தொகுதி உடன்பாட்டில் தும்கூரு மக்களவைத் தொகுதி மஜதவுக்கு ஒதுக்கப்பட்ட்து. இதனால் அம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், துணை முதல்வருமான ஜி.பரமேஸ்வர் அதிருப்தி அடைந்தார். 
    தும்கூரு தொகுதியை மீண்டும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அவர் கட்சியின் மேலிடத் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்தார்.  அவரது கோரிக்கையை கட்சியின் மேலிடம் கண்டுகொள்ளவில்லை.  முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் அழுத்தத்தால், தும்கூரு தொகுதி மஜதவுக்கு ஒதுக்கப்பட்டது என அதிருப்தி அடைந்த, முத்தேஹனுமே கெளடா,  போட்டி வேட்பாளராக தும்கூரு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். 
    மஜதவுக்கு ஒதுக்கப்பட்ட வடபெங்களூரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே விட்டுக் கொடுத்த முன்னாள் பிரதமர் தேவெ கெளடா,  தும்கூரு தொகுதியில் போட்டியிட மஜத சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  கூட்டணி தர்மத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்ததையடுத்து,  போட்டி வேட்பாளர் முத்தேஹனுமே கெளடாவைச் சமாதானப்படுத்தி, வேட்பு மனுவை திரும்பப் பெற காங்கிரஸ் கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் முத்தேஹனுமே கெளடாவைச் சந்தித்து, தும்கூரு தொகுதியை கூட்டணிக் கட்சியான மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் பிரதமரும், மஜத கட்சியின் தேசிய தலைவருமான தேவெ கெளடா போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். 
    நீங்கள் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு தேவையான வாக்குகள் குறைய வாய்ப்புள்ளது.  எனவே, நீங்கள் போட்டியிலிருந்து விலகினால், அவர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.  நீங்கள் போட்டியிலிருந்து விலகினால் எதிர்காலத்தில் கட்சியிலும்,  ஆட்சி அதிகாரத்திலும் உரிய பதவி வழங்கி கெளரவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். 
    காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து முத்தேஹனுமே கெளடாவை சமாதானப்படுத்தினாலும், அவர் எதற்கும் பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  கூட்டணிக் கட்சியான மஜதவுக்கு சங்கடத்தையும், கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  முன்னாள் பிரதமர் தேவெ கெளடா போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால்,  தும்கூரு தொகுதி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai