Enable Javscript for better performance
புதிதாக 3 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்க திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய 3 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
    கர்நாடகத்தில் மொத்தம் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் 65 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக உள்ளன. 2018-19-ஆம் கல்வியாண்டில் கர்நாடகம் முழுவதும் 20 ஆயிரம் பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன. 
    கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுக்காண்டு குறைந்துவரும்நிலையில், 3 புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது. 3 பொறியியல் கல்லூரிகளும் 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட தொடங்கும் என்று தொழில்நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.  இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் சேர்த்தே பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படவிருக்கிறது.
     கொப்பள் மாவட்டத்தின் தலக்கல், கங்காவதி, ஹாசன் மாவட்டத்தின் மொசலே ஹொசள்ளி நகரில் 3 புதிய பொறியியல் கல்லூரிகளும் அமையவிருக்கின்றன. இதன் மூலம் புதிதாக 700 பொறியியல் இடங்கள் சேர்க்கப்படும். பல்வேறு மாணவர் சங்கங்களின் கோரிக்கையின்பேரிலேயே புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,"தனியார் அல்லது தற்சார்பு கல்லூரிகளை ஒப்பிடுகையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் மிகவும் குறைவாகும். இந்த கருத்தின் அடிப்படையில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இக்கல்லூரிகள் வாயிலாக ஏழை, நடுத்தர மாணவர்கள் பயனடைவார்கள் என்றார்.
    புதிய கல்லூரிகளை அமைப்பதற்கான முன்மொழிவை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி பேரமைப்புக்கு(ஏஐசிடிஇ)அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கல்லூரி அமையும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்லூரிகளில் தலா 4 பாடப்பிரிவுகள், முதல்கட்டமாக தலா 60 மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. 
    தலக்கல், கங்காவதியில் புதிய கட்டடத்திற்கு அவசியமில்லை. இங்கு கட்டடங்கள் ஏற்கெனவே உள்ளன. மொசலேஹொசள்ளியில் தற்காலிக கட்டடத்தில் கல்லூரி செயல்படும். 2020-21-ஆம் கல்வியாண்டில் புதிய கட்டடத்தில் இக்கல்லூரி செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடகத்தில் தற்போது11 அரசு பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இக்கல்லூரிகளில் பெரும்பாலானவை உள்கட்டமைப்பு வசதி குறைபாடால் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி பேரமைப்பு குறைத்துவிட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai