அமைச்சர் புட்டராஜின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை
By DIN | Published On : 29th March 2019 09:15 AM | Last Updated : 29th March 2019 09:15 AM | அ+அ அ- |

கர்நாடக அமைச்சர் புட்டராஜின் வீடு உள்பட 15 இடங்களில் வியாழக்கிழமை வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், மஜத சார்பில் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மண்டியா தொகுதியில் மஜத தேர்தல் பொறுப்பாளராக கர்நாடக சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் மண்டியா மாவட்டம், பாண்டுவப்புரா வட்டம், சின்னகுருலி கிராமத்தில் உள்ள அமைச்சர் புட்டராஜின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், மைசூரில் உள்ள அவரது சகோதரரின் மகன்களின் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட 15 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரித் துறையினரின் இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் புட்டராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக வருமான வரித் துறையினர், எனது இல்லம், உறவினர்கள் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள ஒருவரின் தூண்டுதலில் பேரில், மத்தியில் ஆளும் பாஜக அரசு வருமான வரித் துறையினரை ஏவிவிட்டுள்ளது.
வருமான வரித் துறையை பிரதமர் மோடி தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் இந்த போக்குக்கு தேர்தலில் உரிய பதிலை மக்கள் வழங்குவார்கள். மண்டியா தொகுதியில் எங்களை முடக்குவதற்காக பாஜக அரசு வருமான வரித் துறையினரை ஏவிவிட்டுள்ளது என்றார்.
வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைக்கு அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.