கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 73.70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 73.70 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 73.70 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில மேல்நிலைக் கல்வி தேர்வு வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 2018-19-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ஆர்.உமாசங்கர் வெளியிட்டார். 
நிகழாண்டில் மார்ச் 21 முதல் ஏப்.4-ஆம் தேதி வரை 2,847 மையங்களில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 8,25,468 மாணவர்கள் எழுதினர். 228 மையங்களில் 58,876 ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர். 6,08,336 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சராசரியாக 73.70 சதவீதமாகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி 71.93 சதவீதமாக இருந்தது. இதை ஒப்பிடுகையில் நிகழாண்டின் தேர்ச்சி 1.77 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாணவிகள் சாதனை
மாநிலம் முழுவதும் தேர்வெழுதிய 4,37,557 மாணவர்களில் 2,99,587 பேரும் (68.46%), 3,87,911 மாணவிகளில் 3,08,749 பேரும் (79.59%) வெற்றி பெற்றுள்ளனர். நகரப் பகுதிகளைச் சேர்ந்த 3,71,045 மாணவர்களில் 2,59,927 பேரும் (70.05%), கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 4,54,423 மாணவர்களில் 3,48,409 பேரும் (76.67%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.  அரசுப் பள்ளி மாணவர்கள் 77.84 சதவீதம், அரசு மானியம் பெறும் பள்ளி மாணவர்கள் 77.21 சதவீதம், அரசு மானியம் பெறாத மாணவர்களில் 82.72 சதவீதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர்
சிறப்பிடம் பெற்றவர்கள்
மொத்தம் 625-க்கு 625 மதிப்பெண்களை 2 மாணவிகள் பெற்றுள்ளனர். 625-க்கு 624 மதிப்பெண்களை 11 பேரும், 623 மதிப்பெண்களை 19 பேரும், 622 மதிப்பெண்களை 39 பேரும், 621 மதிப்பெண்களை 43 பேரும், 620 மதிப்பெண்களை 56 பேரும் பெற்றுள்ளனர். 
பயிற்று மொழி வாரியாக தேர்ச்சி
கன்னட பயிற்று மொழியில் தேர்வெழுதிய 4,93,100 மாணவர்களில் 3,46,103(70.19%) பேரும், ஆங்கிலப் பயிற்று மொழியில் தேர்வெழுதிய 2,94,836 மாணவர்களில் 2,38,471(80.88%) பேரும், உருது பயிற்று மொழியில் தேர்வெழுதிய 24,983 மாணவர்களில் 14,958 (79.87%) பேரும், மராத்தி பயிற்று மொழியில் தேர்வெழுதிய 11,956 மாணவர்களில் 8,473 (70.87%) பேரும், தெலுங்கு பயிற்று மொழியில் தேர்வெழுதிய 303 மாணவர்களில் 185(61.06%), தமிழ் பயிற்று மொழியில் தேர்வெழுதிய 122 மாணவர்களில் 64(52.46%) பேரும்,  ஹிந்தி பயிற்று மொழியில் தேர்வெழுதிய 168 மாணவர்களில் 82(48.81%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநிலத்தில் சிறப்பிடம்
பெங்களூரு ஊரக மாவட்டம், ஆனேக்கல் வட்டத்தின் அத்திபெலே பகுதியைச் சேர்ந்த புனித பிலோமினாஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி டி.ஸ்ருஜ்னா, வட கன்னட  மாவட்டம், கும்டா வட்டத்தின் கொலபா விக்டோபா சான்பாக் கல்பாக்கர் உயர்நிலைப் பள்ளி மாணவி நாகஞ்சலி ஆகிய இரு மாணவிகளும் 100 சதவீதம் மதிப்பெண்கள்(625-க்கு 625 மதிப்பெண்கள்) பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 
பெங்களூரைச் சேர்ந்த புனித ஜான்ஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி யூ.எஸ்.பாவனா, செளந்தர்யா உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர்.பாவனா, லிட்டில் லில்லி உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.சாய்ராம், சமாஜ்சேவா மண்டலி உயர்நிலைப் பள்ளி மாணவி எச்.வி.சாம்பவி, தும்கூரைச் சேர்ந்த சித்தகங்கா உயர்நிலைப் பள்ளி மாணவி சி.ஹர்ஷித், மங்களூரைச் சேர்ந்த விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி மாணவி சின்சனலட்சுமி, குமாரசாமி ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.கிரிபா, ஸ்ரீவெங்கடரமண சுவாமி உயர்நிலைப் பள்ளி மாணவி அனுபமா காமத், விட்டல் ஜேய்சீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி சின்மயி, ஹாசனை சேர்ந்த விஜயா உயர்நிலைப் பள்ளி மாணவி பிரகதி கெளடா, மாணவர் பி.அபின் ஆகிய 11 மாணவர்களுக்கும் 625-க்கு 624 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியிடும் போது கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரிய இயக்குநர் சுமங்களா உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
பள்ளிகளில் புதன்கிழமை (மே 1) தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. விடைத்தாள் நகல் பெற மே 2 முதல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கிடைத்த பிறகு மே 6 முதல் 17-ஆம் தேதிவரை மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 
விடைத்தாள் நகல்பெற ஒரு பாடத்துக்கு ரூ.405, மறு மதிப்பீட்டுக்கு (ஒரு பாடத்துக்கு) ரூ.805. விடைத்தாள் நகல், மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை அனைத்து பள்ளிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு அட்டவணை
கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு ஜூன் 21 முதல் 28-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்க மே 2 முதல் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மறுத்தேர்வர்களின்  விண்ணப்பங்களை மே 15-ஆம் தேதிக்குள் வாரியத்துக்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 
துணைத்தேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.290, இரண்டு  பாடங்களுக்கு ரூ.350, மூன்று பாடங்களுக்கு மேல் ரூ.470 தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு அட்டவணை: ஜூன் 21-இல் கணிதம், ஜூன் 24-இல் அறிவியல், ஜூன் 25-இல் முதல்மொழிப்பாடம்-கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஜூன் 26-இல் சமூக அறிவியல், ஜூன் 27-இல் இரண்டாம் மொழிப்பாடம்-ஆங்கிலம், கன்னடம், ஜூன் 28-இல் மூன்றாம் மொழிப்பாடம்-இந்தி, கன்னடம், ஆங்கிலம், அராபிக், பாரசீகம் பாடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிப் பாடங்களின் தேர்வுகள் காலை 9.30 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், முதல் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் காலை 9.30 முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. முதல் மொழிப் பாடத்துக்கு மட்டும் 125 மதிப்பெண்களுக்கும், இதர பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம்
 ஆண்டு            தேர்ச்சிவிகிதம்
1. 2008    66.37%
2. 2009    70.22%
3. 2010    66.81%
4. 2011    73.90%
5. 2012    76.13%
6. 2013    77.47%
7. 2014    81.20%
8. 2015    81.82%
9. 2016    75.11%
10. 2017    67.87%
11. 2018    71.93%
12. 2019    73.70%


மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
   மாவட்டம்               தேர்ச்சிவிகிதம்
1. ஹாசன்    89.33%
2. ராமநகரம்    88.49%
3. பெங்களூரு ஊரகம்    88.34%
4. வடகன்னடம்    88.12%
5. உடுப்பி    87.97%
6. சிதர்துர்கா    87.46%
7. மங்களூரு    86.73%
8. கோலார்    86.71%
9. தாவணகெரே    85.94%
10. மண்டியா    85.65%
11. மதுகிரி    84.81%
12. சிர்சி    84.67%
13. சிக்கோடி    84.09%
14. சிக்மகளூரு    82.76%
15. சாமராஜ்நகர்    80.58%
16. கொப்பள்    80.45%
17. மைசூரு    80.32%
18. தும்கூரு    79.92%
19. ஹாவேரி    79.75%
20. சிக்பளாப்பூர்    79.69%
21. சிவமொக்கா    79.13%
22. குடகு    78.81%
23. பெல்லாரி    77.98%
24. பெலகாவி    77.43%
25. விஜயபுரா    77.36%
26. பெங்களூரு வடக்கு    76.21%
27. பாகல்கோட்    75.28%
28. தார்வாட்    75.04%
29. பீதர்    74.96%
30. கலபுர்கி    74.65%
31. கதக்    74.05%
32. பெங்களூரு தெற்கு    68.83%
33. ராய்ச்சூரு    65.33%
34. யாதகிரி    53.95%
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com