மைசூரு மக்களவைத் தொகுதியில் மஜதவினர் பாஜகவுக்கு வாக்களிப்பு: மஜத அமைச்சர் ஜி.டி.தேவெ கெளடா தகவல்

மைசூரு மக்களவைத் தொகுதியில் மஜத தொண்டர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்று மஜதவை

மைசூரு மக்களவைத் தொகுதியில் மஜத தொண்டர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்று மஜதவை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி.தேவெகெளடா அதிர்ச்சி தகவலை அளித்தார்.
இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மைசூரு மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மஜத தொண்டர்களிடையே இணக்கமான சூழல் காணப்படவில்லை. சிற்சில தவறுகளால் முறையாக தேர்தல் பணியாற்ற முடியவில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் மற்றும் மஜத தொண்டர்கள் அரசியல்ரீதியாக மோதிக்கொண்டு வந்துள்ளனர். இந்த மோதலை தடுக்க முடியவில்லை. 
காங்கிரஸ்-மஜதகூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும், கருத்து மோதல்கள் நீடிக்கசெய்தன. உதாரணத்துக்கு உத்பூர் கிராமத்தில் இரு கட்சியினரும் ஊராட்சி தேர்தலை போல மோதிக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸுக்கும், மஜதவினர் பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர். இதுபோன்ற நிலைமை மேலும் பல ஊர்களில் நடந்துள்ளது. 
காங்கிரஸ், மஜத ஆகிய இருகட்சிகளும் தங்களது பலத்தை முழுமையாக பயன்படுத்தியிருந்தால் கர்நாடகத்தில் 28 இடங்களில் பாஜகவுக்கு 5 இடங்கள் கூட கிடைத்திருக்காது. கட்சி தொண்டர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் கொஞ்சம் முன்பாகவே கூட்டணி முடிவை எடுத்து, தொகுதி பங்கீடு செய்திருக்க வேண்டும். பாஜகவை ஆட்சியில் இருந்துவிலக்கிவைக்கவே காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனாலும், அடிமட்டத்தில் தொண்டர்களிடையே கூட்டணி ஏற்படவில்லை. எனினும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் கூட்டணி ஆட்சியின் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றார்.
இதுகர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ஜி.டி.தேவெ கெளடாவின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், "முரண்பட்ட கருத்துகளைக் கூறியிருப்பதால், மக்களவைத் தேர்தலின்போது எந்தவகையில் ஜி.டி.தேவெ கெளடா வேலை செய்தார் என்பது தெளிவாகவில்லை. இதுபோன்ற கருத்துகள் கூட்டணி அரசுக்கு நல்லதல்ல. தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டோர் சரியாக செயல்படாவிட்டால், இதுபோல தான் ஆகும். ஜி.டி.தேவெகெளடா அக்கறையுடன் தேர்தல் பணியாற்றவில்லை என்பது புரிகிறது. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை ஓராண்டுக்கு முன்பே அறிவித்துவிட்டேன். கூட்டணி அமைப்பதில் தாமதமாகவில்லை. மேலும் மைசூரு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்றும் ஏற்கெனவே முடிவாகியிருந்தது' என்றார்.
ஜி.டி.தேவெ கெளடாவின் கருத்தை பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணைமுதல்வருமான ஆர்.அசோக் கூறுகையில்,"ஜி.டி.தேவெகெளடாவின் கருத்து மக்களுடைய கருத்தாகும். மஜத மட்டுமல்ல, காங்கிரஸ் உறுப்பினர்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல, மண்டியா தொகுதியிலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு காங்கிரஸ்,மஜத தொண்டர்கள் வாக்களித்துள்ளனர். கூட்டணி ஆட்சியை காங்கிரஸார் கவிழ்த்துவிடுவார்கள். அந்தவேலையில் பாஜக ஈடுபடாது' என்றார்.
எனினும், மைசூரு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சி.எச்.விஜயசங்கர், தனது வெற்றி உறுதியானது என்றும், ஜி.டி.தேவெகெளடாவின் கருத்து குறித்து அவரிடமே விளக்கம் கேட்கவிருப்பதாக தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com