"மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கொள்கைகள் இல்லை'

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கொள்கைகள் எதுவும் வகுக்கப்படவில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றஞ்சாட்டினார்.
பெங்களூரில் புதன்கிழமை மே தினத்தை முன்னிட்டு மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது: சர்வதேச அளவில் உலக நாடுகளின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. நாட்டின் உற்பத்தியிலும் அவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தொழிலாளர்களின் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் சிறந்த கொள்கையை வகுத்து செயல்பட வேண்டும். 
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எந்த கொள்கையும் வகுக்கவில்லை. நாட்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சி பெற்று வருகின்றன. 
சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நடுத்தர, தொழிலாளர்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களின் வளர்ச்சிக்கான எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன. ரஃபெல் போர் விமானம் விவகாரத்தில் மத்திய அரசு, தனியாருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு  ரஃபெல் போர் விமானம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கொடுத்திருந்தால், தற்போது எச்.ஏ.எல் நிறுவனம் கடன் வாங்கி ஊதியம் தரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது. பொது நிறுவனங்களை மூடி, தனியாருக்கு வாய்ப்பு வழங்குவதில் மட்டுமே பிரதமர் மோடியின் அரசு குறியாக உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
தொழிலாளர் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ். பிரகாசம் பேசியது: தொழிலாளர் நலனில் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு அக்கறை கொண்டுள்ளது. என்றாலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குத்தகைதாரர்கள் மூலம் வழங்காமல் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் தொழிலாளர்களாக உள்ளனர். 
ஆனால், அவர்களுக்கான எந்த சலுகையையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கவில்லை. மதவாதத்தை பாஜக அரசு முன்னெடுத்து செல்கிறது. காங்கிரஸ் கட்சி மட்டுமே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது. எந்த மதத்தினரானலும் பயங்கரவாதத்தை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. 
நாட்டின் எல்லையில் வெடி மருந்துகளைக் கொண்டு வந்து ராணுவ வீரர்களை தாக்கியதால் 40 பேர்கள் இறக்க நேரிட்டது. இந்தியாவிற்குள் வெடி மருந்துகள் வந்தது எப்படி என்பதனை விசாரணை செய்து, ராணுவ வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் எச்.கே.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com