உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்: காங்கிரஸ் தனித்துப் போட்டி

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு மஜதவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அதன்பிறகு நடந்த சட்டப்பேரவை, மக்களவை இடைத் தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மஜத-காங்கிரஸ் கட்சிகள், கடந்தாண்டு 109 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டது. 
இதேபோல, மஜதவும் தனித்துப் போட்டியிட்டது. இதனால் அத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே முத்தரப்பு போட்டியாக அமைந்திருந்தது. 2662 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான அத்தேர்தலில் காங்கிரஸ் 982, பாஜக 929, மஜத 375 வார்டுகளைக் கைப்பற்றியிருந்தன.
தற்போது இரண்டாம் கட்டமாக, மே 29-ஆம் தேதி 63 உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்தமுறையை போலவே இத்தேர்தலிலும் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் இத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டியாக நடக்கவுள்ளது.   இது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ்கூறுகையில்,"உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள வார்டுகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலில் மஜதவுடன் அதிகாரப்பூர்வமான எவ்வித கூட்டணியும் அமைக்கப்படாது. ஆனால், உள்ளூர் தலைவர்கள் விரும்பினால் உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிடலாம்' என்றார்.
மஜத மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இணக்கமாக பணியாற்ற முடியாத மனத்தடை காணப்படுவதால், உள்ளாட்சி அமைப்புகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மேலும் மஜத-காங்கிரஸ் கூட்டணி, சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களுக்குமட்டுமே பொருந்தும் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல, பகுஜன்சமாஜ் கட்சியும் 63 உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்களில் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com