கோலார் தங்கவயல் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு
By DIN | Published On : 16th May 2019 09:06 AM | Last Updated : 16th May 2019 09:06 AM | அ+அ அ- |

கோலார் தங்கவயல் அரசு பொது மருத்துவமனையில்,பெங்களூரு நாராயண இதய மருத்துவமனை சார்பில் இதயநோய் சிகிச்சை, அவசரச் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை செயல்படுத்த எம்எல்ஏ ரூபகலா ஏற்பாடு செய்துள்ளார்.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் அரசு பொதுமருத்துவமனை உள்ளது. தங்கவயல் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் இருந்து தினசரி நுற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.
அனைத்து மருத்துவ உபகரண வசதிகளுடன் உள்ள இந்த மருத்துவ மனையில் பல ஆண்டுகளாக மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கோலார் மாவட்டத்தில் பெரிய நகரமாகவும், அதிக அளவில் மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் கோலார் தங்கவயல் உள்ளது.
இந்த நிலையில், மாரடைப்பால் பாதிக்கும் மக்களுக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவரோ அல்லது உபகரணங்களோ இல்லை. இதனால், குப்பம் அல்லது கோலாருக்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து செயல்படும் திட்டத்தின் கீழ் கோலார் தங்கவயல் அரசு பொதுமருத்துவமனையில் பெங்களூர் நாராயண இதய மருத்துவத் துறை மூலம் அவசரச் சிகிச்சை பிரிவுகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை நாராயண இதய மருத்துவமனையின் நிர்வாகி வினோத் ஜோசி, மருத்துவர் பிரதீப் ஆகியோர் தங்கவயல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு எம்எல்ஏ ரூபகலா, மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் விஜயகுமார், தலைமை மருத்துவர் சிவகுமார், நகரமன்ற ஆணையர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், அவசர மற்றும் இதய நோய் சிகிச்சை பிரிவு செயல்படுத்த அரசு மருத்துவமனையில் கட்டடம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் தேர்வு செய்யப்பட்டதும் சிகிச்சை பிரிவுகள் செயல்பட தொடங்கும் என்று உறுதியளித்தனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளதால் தங்கவயல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.