முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கோலார் தங்கவயலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
By DIN | Published On : 18th May 2019 08:47 AM | Last Updated : 18th May 2019 08:47 AM | அ+அ அ- |

கோலார் தங்கவயலில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க உலகமதி குன்றின் அடிவாரத்தில் ஆள்துளைக் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயலுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்த பேத்தமங்கலம் ஏரி முற்றிலும் செயலிழந்த பிறகு, குடிநீர் லாரிகளையே பொதுமக்கள் நம்பி உள்ளனர். மற்ற தேவைகளுக்காக அப்பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மக்கள் நம்பி உள்ளனர்.
ஒருசில பகுதிகளில் இந்த ஆழ்துளைக் கிணறுகளும் பழுதடைந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிபோனதாலும், மின் இயந்திரம் பழுது காரணமாகவும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்மன்ற வார்டுகள் தோறும் நேரில் செல்லும் எம்.எல்.ஏ.ரூபகலா வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து பகுதி மக்களிடம் கேட்டறிந்து வந்தார். அப்போது பல வார்டுகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடே முக்கிய பிரச்னையாக உள்ளது.
இதுகுறித்து நகரமன்ற ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இதையடுத்து, ஆங்கிலேயர் காலத்தில் உலகமதி குன்றின் அடிவாரத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அங்கிருந்து நீரை குழாய்களில் எடுத்து வந்து சாம்பியன் பகுதியில் உள்ள 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து, அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்ததது தெரியவந்தது.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக அந்த ஆழ்துளைக் கிணறுகள் பழுதடைந்தும், நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாடின்றி உள்ளது. எனவே, பழுதான ஆழ்துளைக் கிணறுகளை சரிசெய்து தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெள்ளிக்கிழமை சீரமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், சுத்தம் செய்யப்பட்ட நீர்த் தேக்க தொட்டி ஆகியவற்றை தங்கவயல் சட்டப்பேரவை உறுப்பினர் ரூபகலா நேரில் சென்று பார்வையிட்டார்.
நகர்மன்ற வார்டுகள் 8,12,13,14,மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் அப்பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு தீரும் என்றார்.