"ஆங்கில மோகம் நம்மை ஆக்கிரமித்துள்ளது'
By DIN | Published On : 18th May 2019 08:47 AM | Last Updated : 18th May 2019 08:47 AM | அ+அ அ- |

ஆங்கில மோகம் நம்மை ஆக்கிரமித்துள்ளதாக சாகித்ய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர கம்பாரா தெரிவித்தார்.
பெங்களூரு கன்னட பவனில் வெள்ளிக்கிழமை சாகித்ய அகாதெமி, பம்பா கலை மற்றும் சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பி.புட்டசாமையா குறித்த கருத்தரங்கில் அவர் பேசியது: ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்தபோது அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உருவாக்கினார்கள். இதனால் தலித் சமுதாய மக்கள் முதல் மற்ற சமுதாயத்திற்கும் சமமான, சிறந்த கல்வி கிடைத்தது என்பது உண்மைதான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், நாமும் ஆங்கிலத்தைக் கற்க நேர்ந்தது.
அவர்கள் நமக்கு சுதந்திரம் அளித்துச் சென்ற பிறகும், இன்னும் நாம் ஆங்கில மோகத்தால் ஆக்கிரமித்துள்ளோம். இதனால் நாம் நமது மொழிக்கான தனித்தன்மையை இழந்துள்ளோம். இளைஞர்கள் பலர் தாய்மொழியை மறந்துவிட்டு, ஆங்கில மொழியில் மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும் நாடகத் துறைக்கு மறைந்த பி.புட்டசாமையா அபாரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆனால், ஆற்றிய பணிக்கு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
நாடகத் துறைக்கு பி.புட்டசாமையா ஆற்றிய பங்களிப்பு குறித்து தேசிய அளவில் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட வேண்டும். சாகித்ய அகாதெமியும் இதுபோன்ற கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கும். ஆங்கிலேயரை எதிர்த்து நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்துக்கு நாடகங்கள் பேருதவியாக இருந்தன. கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் கீழ் அதிக அளவில் கலை, கலாசார, இசை, நாடகங்கள் நடைபெற வேண்டும். நாடகங்களின் வளர்ச்சிக்கு உதவிய மாஸ்டர் ஹீரண்யா, குப்பி வீரண்ணா போன்றவர்களின் சேவைகளையும், இளைஞர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.