கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை
By DIN | Published On : 18th May 2019 08:49 AM | Last Updated : 18th May 2019 08:49 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.
கர்நாடகத்தில் மின் வாரியம் சார்பாக மின் விநியோகம் செய்ய பெஸ்காம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் உள்ளன. இந்த 5 நிறுவனங்களும் மாநில அளவில் மின்விநியோகம் செய்வதில் இழப்பு ஏற்பட்டுவருவதாகவும், எனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த நவம்பரில் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து முதல்வர் குமாரசாமி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், மின் விநியோக நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, யூனிட் மின்சாரத்துக்கு 45 பைசா முதல் 50 பைசா வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை முதல்வர் குமாரசாமி கேட்டுக் கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.