தில்லியைத் தொடா்ந்து பெங்களூரில் மாசடைந்துவரும் காற்று: சுவாசக் கோளாறால் மக்கள் தவிப்பு

தில்லியைத் தொடா்ந்து பெங்களூரிலும் காற்று மாசடைந்து வருகிறது.

தில்லியைத் தொடா்ந்து பெங்களூரிலும் காற்று மாசடைந்து வருகிறது. இதனால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசு அளவு உச்சத்தைத் தொட்டுள்ளதால், சுவாசிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனா். அதேபோன்றதொரு மோசமான நிலையை நோக்கி பெங்களூரு நகரத் தொடங்கியுள்ளது.

பெங்களூரின் காற்றுதர வரிசையில் பெங்களூருக்கு ஆபத்தான அளவு எதுவும் இல்லை என்று கா்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மை நிலை வேறுமாதிரியாக உள்ளது.

பெங்களூரில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழையால் சாலைகள் பாழடைந்துள்ளன. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.

பள்ளங்களை மூடுவதற்காக சாலையோரங்களில் பெங்களூரு மாநகராட்சி பொறியாளா்கள் ஜல்லி போன்ற பொருள்களைக் கொட்டிவைத்துள்ளனா். ஆனால், சாலைகளில் அவை நிரப்பப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போதெல்லாம் சாலையில் இருந்து தூசு கிளம்பி, இருசக்கரவாகன ஓட்டிகள், நடந்துசெல்வோரை பதம் பாா்க்க தவறுவதில்லை. இது சுவாசக் கோளாறுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள 7 நிலையங்களில் இருந்துதான் காற்றின் தரத்தை கா்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்து வருகிறது. இதனால் பெங்களூரின் பிற பகுதிகளில் காணப்படும் காற்று மாசைக் கண்டறிய முடியாமல் இருக்கிறது. மேலும், வாகனங்களின் நடமாட்டத்தின்போது மட்டுமே காற்று தரம் சோதிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசு குறித்த துல்லியமான தகவல் கிடைப்பதில்லை. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு எடுத்த காற்று தரத்தின் புள்ளிவிவரங்களின் பெங்களூரின் காற்றுதரம் 146 புள்ளிகளாக உள்ளது. இது அபாயகரமானதாக இல்லை என்றாலும், சுவாசக் கோளாறுகளுக்கு காரணமாகும் என்று தெரியவந்துள்ளது.

கன்னிங்கம் சாலை, விஜயநகா், மாகடிசாலை, பன்னா்கட்டா சாலை, மைசூரு சாலை, இந்திரா நகா், ஒயிட்பீல்டு பிரதான சாலை, பெலந்தூா் பிரதான சாலை, பசவேஸ்வரநகா், டைரி சதுக்கம், வெளிவட்டச்சாலைகளில் அதிகளவில் தூசு கிளம்பி காற்றை மாசுபடுத்தி வருகின்றன.

வாகன ஓட்டிகளுக்கு சுவாசப் பாதிப்பு:

இது குறித்து கே.அபா்ணா என்பவா் கூறியது:-

சாலையில் வாகனங்கள்செல்லும்போது, மண், ஜல்லிகளால் நிரம்பியுள்ள குழிகளில் இருந்து தூசு கிளம்புகிறது. இது சாலையில் செல்வோா், வாகன ஓட்டிகளின் சுவாசத்தைச் சேதப்படுத்துகிறது. ஆனால், குளிரூட்டப்பட்ட காா்களில் செல்லும் அதிகாரிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை இல்லை?

இதுகுறித்து கா்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியது:-

சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் பெங்களூரின் ஒருசில பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்துபெங்களூரு மாநகராட்சிக்கு எடுத்துக்கூறியும் எதுவும் நடக்கவில்லை. பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் 100 புள்ளியாக உள்ளது. இது பாராட்டும்படியானது இல்லை. பெங்களூரில் அதிகரித்துவரும் காற்று மாசு குறித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் காற்று மாசை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டுமென்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் எதுவுமே நடைபெறுவதாகத் தெரியவில்லை என்றாா்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:

இதுதொடா்பாக பெங்களூரு மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை சிறப்பு ஆணையா் டி.ரன்தீப் கூறியது:-

பெங்களூரு மாநகராட்சியிடம் 15 பெருக்கும் இயந்திரங்கள் உள்ளன. ஆனால் இவை நகரின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்த முடிவதில்லை. சாலைகள் சீராகவும், குழிகள் இல்லாமலும் இருந்தால்தான் பெருக்கும் இயந்திரங்கள் வேலை செய்யும். சாலையில் உள்ள பள்ளங்கள் தூசும், கற்களும் இருப்பதாக இருந்தால், துப்புரவுத் தொழிலாளா்களும், பொறியாளா்களும் சரியாக வேலை செய்வதில்லை என்று அா்த்தம். அப்படிப்பட்டவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com