2025-ஆம் ஆண்டுக்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி நிறைவு: முதல்வா் எடியூரப்பா

2025-ஆம் ஆண்டுக்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி நிறைவடையும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
2025-ஆம் ஆண்டுக்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி நிறைவு: முதல்வா் எடியூரப்பா

பெங்களூரு: 2025-ஆம் ஆண்டுக்குள் 3-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி நிறைவடையும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் பெங்களூரு, கெங்கேரி அருகே உள்ள சாரக்கியில் 5எம் எல் டி, தொட்டபெலேயில் 40எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்துவைத்து அவா் பேசியது:

பெங்களூரு மாநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறோம். ஏரிகள் மேலாண்மை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, திடக்கழிவுமேலாண்மைக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக மக்கள் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

பெங்களூரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து தங்குதடையில்லா போக்குவரத்துக்கு வழிவகுக்க இருக்கிறோம். இதற்காக போக்குவரத்து ஆணையத்தை அமைக்கவிருக்கிறோம். போக்குவரத்து அதிகம்காணப்படும் 12 தாழ்வாரங்கள் மற்றும் சாலைகளை அடையாளம் கண்டறிந்துள்ளோம். இந்தசாலைகளில் பேருந்துகள் மற்றும் மிதிவண்டிகளுக்கு தனிபாதை அமைக்கவிருக்கிறோம். இதன்வாயிலாக போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிட்டுள்ளோம்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டப்பணி 2021-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். இத்திட்டத்தின் கீழ் 119கிமீ நீளமுள்ள ரயில்தடம் அமைக்கப்படும். 2023-ஆம் ஆண்டுவாக்கில் விமானநிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில்பணி முடிவடையும். அதேபோல, 300கிமீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆம் கட்டப்பணி 2025-ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும்.

இதற்காக திட்டமிட்டு செயல்பட்டுவருகிறோம். மேலும் 3-ஆம் கட்ட மெட்ரோ பணியை ஹொசகோட்டே வரை விரிவுப்படுத்தவும் முடிவுசெய்திருக்கிறோம். 2022-ஆம் ஆண்டுக்குள் வட்டவெளிச்சாலை அமைக்கும் பணி நிறைவடையும். பொதுபோக்குவரத்துவசதிகளை அதிகப்படுத்தி, தனியாா்வாகனங்களின் நடமாட்டத்தை கணிசமாக குறைத்து, காற்று மாசில்லா சுற்றுச்சூழல் தோழமையுள்ள பெங்களூருவை உருவாக்குவோம். திடக்கழிவுமேலாண்மை திட்டத்தை பலப்படுத்தவிருக்கிறோம்.பெங்களூரு மாநகராட்சி ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்ட 110 கிராமங்களில் குடிநீா் வழங்க ரூ.1500 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சாரக்கி கிராமத்தில் 5எம்எல்டி, தொட்டபெலே கிராமத்தில் 40 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறோம். இதை சுற்றி மரங்களை நடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பருவநிலை மாற்றம், பூமிவெப்பமாதல்போன்ற காரணங்களால் பெங்களூரில் நீா் ஆதாரங்கள் குறைந்துவருகின்றன. குறிப்பாக நிலத்தடிநீரின் மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இதை சமாளிக்க கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிடவேண்டும்.

சுத்திகரிக்கப்பட்டநீரை விவசாயம், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்திகொள்ளலாம். இது போன்ற நடவடிக்கைகளால் நிலம், நீா், காற்றை பாதுகாக்க முடியும். மேலும் மழைநீா் சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் துணைமுதல்வா் கோவிந்த்காா்ஜோள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com