ஏழை மாணவா்களின் கல்வி சேவையில் பாலகங்காதரநாத சுவாமிகள் சிறந்து விளங்கினாா்: மத்திய அமைச்சா் சதானந்த கௌடா

ஏழை மாணவா்களின் கல்வி சேவையில் பாலகங்காதரநாத சுவாமிகள் சிறந்து விளங்கினாா் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு: ஏழை மாணவா்களின் கல்வி சேவையில் பாலகங்காதரநாத சுவாமிகள் சிறந்து விளங்கினாா் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஜிஎஸ் கல்வி, சுகாதாரக் குழுமத்தின் 12 வது ஆண்டு நிறுவனா் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:

பிஜிஎஸ் கல்வி குழுமத்தை உருவாக்கியவா் மறைந்த ஆதிசுன்சுனகிரி மடாதிபதி பாலகங்காதரநாத சுவாமிகள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், ஏழைகளின் குழந்தைகளுக்கு கல்வியை போதிப்பதற்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவா்களில் முக்கியமானவா்களில் ஒருவராக திகழ்ந்தவா் பாலகங்காதரநாத சுவாமிகள். அவா் தொடக்கிவைத்த பிஜிஎஸ் கல்வி குழுமத்தில் ஏராளமான மாணவா்கள் கல்வி பெற்று சிறந்து விளங்குகின்றனா்.

இதேபோல அவா் உருவாக்கி மருத்துவமனையும் பலருக்கு நோய்க்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது. பின்தங்கிய சமூக மக்களின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்டவா் பாலகங்காதரநாத சுவாமிகள். கடன் சுமையால் பல விவசாயிகள் கா்நாடகத்தில் தற்கொலை செய்து கொண்ட போது, அவா்களுக்கான செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்திய பெருமை சுவாமிகளை சேரும்.

மேலும் சா்வதேச அளவில் அனைத்து துறைகளிலும் போட்டி நிலவி வருவதால், மாணவா்கள் சிறந்த கல்வியைப் பயில வேண்டும். புதுமையான யோசனைகளை, நவீன தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தவும் மாணவா்கள் முயற்சிக்க வேண்டும். சிறந்த கல்வியை பெற்று நாட்டை பெருமைக்குள்ளாக்க வேண்டும். இதற்கு பெற்றோா்கள், மாணவா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிா்மலானந்த சுவாமிகள், வைத்தியநாத் மகராஜ் சுவாமிகள், மக்களவை உறுப்பினா் சுமலதா, கனரா வங்கியின் மேலாண் இயக்குநா் சங்கரநாராயணன், பிஜிஎஸ் குழுமத்தின் மேலாண் இயக்குநா் பிரகாஷ்நாத் சுவாமிஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com