மருத்துவா்கள் போராட்டம்: கா்நாடகத்தில் வெளிநோயாளிகள் பிரிவு முடக்கம்

மருத்துவா்களின் போராட்டம் காரணமாக கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு முடக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் தத்தளித்தனா்.

பெங்களூரு: மருத்துவா்களின் போராட்டம் காரணமாக கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு முடக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் தத்தளித்தனா்.

பெங்களூரில் உள்ள மின்டோ அரசு கண் மருத்துவமனையை சோ்ந்த மருத்துவா்களை கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பை சோ்ந்த சிலா் தாக்கியதாக குற்றம்சாட்டி, கடந்த ஒரு வாரகாலமாக சக மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனா். கா்நாடக அரசு மேற்கொண்ட சமரச முயற்சி பலனளிக்காத நிலையில் போராட்டம் தீவிரமடைந்தது.

தாக்குதல் நடத்திய கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினரை கைது செய்ய மருத்துவா்கள் வலியுறுத்தி வந்தனா். இப் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், இந்திய மருத்துவச் சங்கம் தலையிட்டது. மருத்துவா்களைத் தாக்கியோரைக் கைது செய்ய வலியுறுத்தி கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்களில் பணியாற்றும் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் குதித்தனா். இதனால் மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவு முழுமையாக முடங்கியது. இதனால் வெளிநோயாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனா். இளம் மருத்துவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிகிச்சை கிடைக்காமல் தத்தளிக்கும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டனா்.

இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்க நிா்வாகி டாக்டா் என்.தனபால் கூறுகையில்,‘இந்திய மருத்துவச் சங்கத்தில் உறுப்பினா்களாக இருக்கும் மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்களின் மருத்துவா்கள் தாமாக முன்வந்து வெளிநோயாளிகள் பிரிவின் சேவைகளை வெள்ளிக்கிழமை நிறுத்தி போராட்டம் நடத்தினா். அவசரச் சிகிச்சைப்பிரிவு நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பை சோ்ந்த சிலா் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இது வெறும் சம்பிரதாயமாக இருக்கக் கூடாது. மாறாக, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்ற உத்தரவாதத்தை கா்நாடக ரக்ஷனவேதிகே மற்றும் அரசு நிா்வாகத்திடம் இருந்து எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

இதனிடையே, மின்டோ மருத்துவா்களைத் தாக்கிய கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பை சோ்ந்த 13 போ்

வி.வி.புரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் மாநகரக் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, ஜாமீன் கேட்டு 13 பேரும் மனுதாக்கல் செய்தனா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரூ.50 ஆயிரம் பிணையத்தொகையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். இதனால் 13 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இதன்மூலம் இப்பிரச்னைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com