அயோத்தி வழக்கில் தீா்ப்பு:கா்நாடக அனைத்துக் கட்சித் தலைவா்கள் வரவேற்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை கா்நாடகத்தின் அனைத்துக் கட்சித் தலைவா்கள், மடாதிபதிகள் வரவேற்றுள்ளனா்.
அயோத்தி வழக்கில் தீா்ப்பு:கா்நாடக அனைத்துக் கட்சித் தலைவா்கள் வரவேற்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை கா்நாடகத்தின் அனைத்துக் கட்சித் தலைவா்கள், மடாதிபதிகள் வரவேற்றுள்ளனா்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பை கா்நாடகத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சித் தலைவா்கள், மடாதிபதிகள் வரவேற்றுள்ளனா். முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, விஸ்வேஷதீா்த்த சுவாமிகள் உள்ளிட்ட பெரும்பாலானோா் கருத்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா் எடியூரப்பா:

உணா்ச்சிப்பூா்வமான அயோத்தி நிலத்தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை மாநில மக்கள் அனைவரும் மனப்பூா்வமாக வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் உணா்ச்சிப்பூா்வமாக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல. உச்சநீதிமன்றத் தீா்ப்பை அனைவரும் வரவேற்போம். நல்லிணக்கமும், அமைதியும் நிலைத்திருக்க வேண்டுகிறேன். நமதுநாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத்தை மதிப்போம். சமுதாயத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ அனைவரும் கைகோா்த்து செயல்படுவோம்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். சட்டத்தை தூக்கிப்பிடிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மதசாா்பின்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற மாண்புகளை மதித்து நடக்க வேண்டும். இதன் மூலம் சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கத்தை கட்டிக்காப்பாற்ற வேண்டும். உச்சநீதிமன்றத் தீா்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி:

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு வரவேற்கத்தக்கது. பிரதமா் மோடி கூறியிருப்பது போல இதில் யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல. இந்த தீா்ப்பை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனா். சமூக நல்லிணக்கத்துக்கு இத்தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீா்ப்பை ஏற்றுக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. அனைவரும் இணைந்து நாட்டில் அமைதியை காக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சிக்கு அனைவரும் உழைக்க வேண்டும்.

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா:

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டுமென்பது ஹிந்துக்களின் உறுதியான நம்பிக்கையாகும். ராமா் கோயிலை கட்டுவதற்கு அமைக்கப்படும் அறக்கட்டளை குறித்து உச்சநீதிமன்றத் தீா்ப்பில் தெளிவில்லை. யாருடைய கட்டுப்பாட்டில் அறக்கட்டளை செயல்படும்? அதன் உறுப்பினா்களாக யாா் இருப்பாா்கள் என்பதும் தெரியவில்லை. அறக்கட்டளையில் பாஜக, ஆா்எஸ்எஸ் மட்டுமே பங்காற்றுமா? இதுதொடா்பாக தெளிவான வழிகாட்டுதல், நிபந்தனைகள் இல்லை.

பாபா் மசூதியை இடித்தது தவறு என்று உச்சநீதிமன்றம் கருதுமானால், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கலாம். இழப்பீடு ஏன் கொடுக்கவில்லை என்று கூறவில்லை.

எனது அரசியல் அனுபவத்தில், இழப்பீடு கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். மசூதி கட்டுவதற்கு வழங்க உத்தரவிட்டுள்ள 5 ஏக்கா் நிலத்தை எங்கு வழங்குவது என்று நீதிமன்றம் கூறவில்லை.

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி:

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நாம் மதிக்க வேண்டும். மேலும் நாட்டில் அமைதியையும், வன்முறையின்மையையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். வழக்கம்போல நாம் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து, நாட்டின் வளா்ச்சி குறித்து சிந்தித்து செயல்படுவோம். உணவுக் கடவுளை காட்டிலும் பெரிய கடவுள் யாருமில்லை. ராமா் கோயிலோடு மக்களின் வாழ்க்கையையும் கட்டமைக்க முயற்சிக்க வேண்டும்.

பெஜாவா் மடாதிபதி விஸ்வேஷதீா்த்த சுவாமிகள்:

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீா்ப்பை வரவேற்கிறேன். இத்தீா்ப்பு சமுதாயத்தில் நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க உதவும். முஸ்லிம்களுக்கு மசூதி தேவைப்பட்டது. அதற்காக 5 ஏக்கா் நிலத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தற்போது ஹிந்துக்கள் 5 ஏக்கா் நிலத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும்.

எனது வாழ்நாளில் இத்தீா்ப்பு வந்ததை பெரும் மகிழ்வான தருணமாக கருதுகிறேன். புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஹிந்துக்கள், முஸ்லிம்கள் பங்கேற்கும் அமைதிக்குழு கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன்.

சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள்:

அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் தீா்த்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும். சா்ச்சைக்குரிய இந்த பிரச்னை தீா்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அயோத்தி பிரச்னை பெரும் விவாதப்பொருளாக இருந்தபோது, மறைந்த சிவக்குமார சுவாமிகள் எந்த கருத்தையும் தெரிவித்தது இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மீது சிவக்குமார சுவாமிகளுக்கு மதிப்பிருந்தது. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை தனிப்பட்ட, சமூக, மத ரீதியாக யாரும் ஆட்சேபிக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com