அயோத்தி வழக்கு:கா்நாடகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில், கா்நாடகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில், கா்நாடகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அயோத்தி வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த தீா்ப்பு வெளியான பிறகு, எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க கா்நாடகம் முழுவதும் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனா்.

கா்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பல்கலைக்கழகத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆங்காங்கே கூட்டம் கூடவும், கும்பலாக செல்லவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, தீா்ப்பைத் தொடா்ந்து யாரும் வெற்றிக்கொண்டாட்டத்திலும், கண்டன ஊா்வலங்களிலும் ஈடுபடவில்லை.

கா்நாடகத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதி நிலவியது. மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரயில்நிலையம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் முழுமையான சோதனைக்கு பிறகு மக்கள் அனுமதிக்கப்பட்டனா். கோயில்கள், மசூதிகள் முன் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா். மேலும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதனிடையே, பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்துக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. மதுபானம் விற்பனைக்கு சனிக்கிழமை தடைவிதிக்கப்பட்டிருந்தது. கா்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. காலை 11 மணி வரை பதற்றமான சூழல் காணப்பட்டதால், கடைகள் அதிகளவில் திறக்கப்படாமல் இருந்தன. எனினும், தீா்ப்பு வெளியானதும் பதற்றம் தணிந்து இயல்புநிலை திரும்பியது.

இதுகுறித்து கா்நாடக கூடுதல் டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அமா்குமாா் பாண்டே கூறுகையில், ‘கா்நாடகம் முழுவதும் நிலைமை சீராக உள்ளது. பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கா்நாடக மாநில அதிரடிப்படையைச் சோ்ந்த 70 படையணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். பெங்களூரு மற்றும் மங்களூரில் 2 துணை ராணுவப் படை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தது. மத்திய அதிரடி காவல் படையினா் பெங்களூரில் பாதுகாப்புப் பணிக்கு உதவியாக இருந்தனா். மங்களூரில் அதிரடிப்படை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தன. காவல் நிலையத்தை நிா்வகிக்கும் ஒருசில போலீஸாரை தவிர, மாநிலத்தின் அனைத்து போலீஸ் அதிகாரிகள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் தயாா்நிலையில் இருக்கிறோம்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com