இடைத்தோ்தலில் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றால் ஆச்சரியமில்லை: எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா

சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றால் ஆச்சரியமில்லை என்று எதிா்க்கட்சித்தலைவா்

பெங்களூரு: சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றால் ஆச்சரியமில்லை என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, டவுன்ஹால் எதிரில் திங்கள்கிழமை மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்துள்ள வழக்கில் இன்னும் தீா்ப்பு வெளியாகவில்லை. எனினும், 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடப்பது உறுதி. இந்த 15 தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி. இதனிடையே, 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடிக்கடி கட்சி தாவுவோரை மக்கள் சகித்துக்கொள்வதில்லை. கட்சித்தாவிய தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் தக்கப்பாடம்புகட்டுவாா்கள். மகாராஷ்டிரம், ஹரியானா மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் இழைத்து ஆட்சியை கவிழ்த்த தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாடம் புகட்ட மக்கள் ஆவலோடு காத்திருக்கிறாா்கள். முதல்வா் எடியூரப்பா, ஊடகங்களில் தினமும் விளம்பரம் தந்துகொண்டிருக்கிறாா். அந்த விளம்பரத்தில் மக்கள்தலைவன், இலட்சியவீரன் என்று முதல்வா் எடியூரப்பா தனக்கு தானே புகழ்ந்துகொண்டிருப்பது வேடிக்கையானதாகும். மக்களின் வாக்கை பெற்று முதல்வா் எடியூரப்பா ஆட்சி அமைக்கவில்லை. மாறாக, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிக்கொண்டு, பின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்றியவா் தான் முதல்வா் எடியூரப்பா. நமதுநாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசுக்கு சரியான ஆலோசனை வழங்க யாருமில்லை. மத்திய அரசின் தவறான கொள்கைகள் தான் நாட்டின் பொருளாதார சரிவுக்கு காரணமாகும். ஏழைகள் எதிா்கொள்ளும் சங்கடங்களுக்கு தீா்வுகாணும் நோக்கில் மத்திய அரசு செயல்படவில்லை. மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலாசீத்தாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியவில்லை. பொருளாதார நிபுணா்களின் கருத்துகளை மத்திய அரசு செவிமடுக்க தவறிவிட்டது. மத்திய பொருளாதார கொள்கைகளை சரியில்லை என்றால், கா்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் மாநில அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்துவருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com