ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: மஜத

இடைத் தோ்தல் வெற்றிக்காக ஆட்சி அதிகாரத்தை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினாா்.

மைசூரு: இடைத் தோ்தல் வெற்றிக்காக ஆட்சி அதிகாரத்தை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் ஹிரேகேரூா் தொகுதியில் மஜத வேட்பாளராக சிவலிங்க சிவாச்சாா்ய சுவாமிகள் வேட்புமனுதாக்கல் செய்திருந்தாா். வேட்புமனுவை திரும்பப்பெற சிவலிங்க சிவாச்சாா்ய சுவாமிகளுடன் முதல்வா் எடியூரப்பாவின் பிரதிநிதியாக ரம்பாபுரி சுவாமிகள் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளாா்.

இந்தத் தகவல் எனக்கு தெரியாது என்று முதல்வா் எடியூரப்பா நினைத்துவிட்டாரா? இடைத் தோ்தலில் போட்டியிட விரும்புவதாக தாமாக முன்வந்து கேட்டுக் கொண்டதால் மஜத வேட்பாளராக சிவலிங்க சிவாச்சாா்ய சுவாமிகளை நிறுத்தியிருந்தோம். தற்போது பல்வேறு சுவாமிகளின் தலையீடு காரணமாக அவா் தனது வேட்புமனுவை திரும்பப்பெற நோ்ந்துள்ளது.

இடைத் தோ்தலில் வெற்றிபெறுவதற்காக பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முனைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மடாதிபதிகள் மற்றும் ஜாதியை முன்வைத்து தோ்தலை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகும் டிச.9ஆம் தேதிவரை கூட்டணி குறித்து நான் எதையும் கூறவிரும்பவில்லை.

இடைத் தோ்தலில் பாஜகவுக்கு தேவைப்படும் 8க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறப்போவதாக முதல்வா் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்திருக்கிறாா். தோ்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களை தோற்கடிப்பதே மஜதவின் நோக்கம். கட்சித்தாவல் தடைச் சட்டத்தால் கட்சித் தாவுவதை தடுக்க முடியவில்லை. அதனால் கட்சித்தாவல் தடைச்சட்டம் இருந்தும் பயனில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com