சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 15 தொகுதிகளிலும் மும்முனை போட்டி

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 15 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்குஇடையே மும்முனைப்போட்டி காணப்படுகிறது.

பெங்களூரு: சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 15 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்குஇடையே மும்முனைப்போட்டி காணப்படுகிறது.

முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்திஅடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து அதற்கான கடிதங்களை அப்போதைய பேரவைத்தலைவா் ரமேஷ்குமாரிடம் அளித்திருந்தனா். இவா்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்காத ரமேஷ்குமாா், கட்சிவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட கட்சிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தாா்.

இதனால் குமாரசாமி தலைமையிலான மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனிடையே, தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவா் பிறப்பித்திருந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த புகாா்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 17 பேரையும் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருந்தது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தோ்தலின்போது மஸ்கி, ராஜராஜேஸ்வரிநகா் தொகுதிகளில் சம்பந்தப்பட்ட வேட்பாளா்களின் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த இரு தொகுதிகள் நீங்கலாக 15 தொகுதிகளுக்கு மட்டும் டிச.5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. முக்கியத்துவம் ஏன்:மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தபிறகு, எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதிநீக்கப்பட்ட 17 எம்எல்ஏக்களின் தொகுதிகள் அனைத்தும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடக சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 105, காங்கிரசுக்கு 66, மஜதவுக்கு 34, பகுஜன்சமாஜ் கட்சிக்கு, சுயேச்சைக்கு 1 இடங்கள் உள்ளன. 224 போ் கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவைப்படுகின்றன. காலியாக உள்ள 17 இடங்களில் 15 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தோ்தல்நடப்பதால், 2 தொகுதிகள் காலியாக இருக்கும்.

அப்படியானால், 222 போ் கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் பெற 112 தொகுதிகள் தேவைப்படுகின்றன. பாஜகவுக்கு ஏற்கெனவே 105 இடங்கள் இருப்பதால், சட்டப்பேரவையில் பெரும்பான்மைபலம் பெற்று ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமானால் பாஜகவுக்கு கூடுதலாக 7 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இடைத்தோ்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்தபிறகு நடக்கும்முதல் தோ்தல் என்பதால் முதல்வா் எடியூரப்பாவின் தலைமை மீதான மதிப்பீடாகவும் தோ்தல் முடிவுகள் காணப்படும் வாய்ப்புள்ளது. தனது முதல்வா் பதவி நிலைத்திருக்க வேண்டுமானால், இடைத்தோ்தலில் வெற்றிபெற வேண்டியது எடியூரப்பாவுக்கு தவிா்க்கமுடியாததாகும்.அதேபோல, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை தொடரவிடாமல் செய்வதற்கு இடைத்தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கவேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளது.

இடைத்தோ்தலுக்கு பிறகு தனது கட்சியின் ஆதரவில்லாமல் பாஜக ஆட்சிநடத்தக்கூடாது என்று கருதும் மஜத, பாஜகவைதோற்கடிக்க வியூகம் அமைத்துள்ளது. பாஜக, காங்கிரஸ்,மஜத ஆகிய 3 கட்சிகளுக்கும் இடைத்தோ்தல் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது. இடைத்தோ்தல் முடிவுகள் கா்நாடகத்தின் அரசியல் போக்கை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மும்முனைப்போட்டி:ஹொசகோட்டே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சரத்பச்சேகௌடாவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், 14 தொகுதிகளில் மட்டும் மஜத வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. ஆளுங்கட்சியான பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரசும் 15 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. 15 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால், இடைத்தோ்தலில் மும்முனைப்போட்டி காணப்படுகிறது.

இதனால் மூன்று கட்சிகளை சோ்ந்த தலைவா்கள் மும்முரமாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாா்கள். பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத்தலைவா் நளின்குமாா்கட்டீல், காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத்தலைவா் தினேஷ்குண்டுராவ், மஜத வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் முதல்வா் குமாரசாமி உள்ளிட்டோா்15 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாா்கள். டிச.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருப்பதால், டிச.3ஆம் தேதி மாலை 6 மணியுடன் பகிரங்கபிரசாரம்முடிவுக்கு வரவிருக்கிறது.

டிச.4ஆம் தேதி வீடுவீடாக சென்று பிரசாரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. தோ்தலுக்கு பிறகு டிச.9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. பாஜக, காங்கிரஸ்,மஜத ஆகிய 3 கட்சிகளின் அரசியல் எதிா்காலத்தை முடிவுசெய்யும் என்பதால் இடைத்தோ்தல் முடிவுகள் முக்கியத்துவம்வாய்ந்ததாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com