கா்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல்:சித்தராமையா

கா்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடப்பது உறுதி என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தெரிவித்தாா்.

ஹுப்பள்ளி: கா்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடப்பது உறுதி என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தெரிவித்தாா்.

ஹுப்பள்ளியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

கா்நாடகத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பா் 5-இல் நடைபெறும் இடைத்தோ்தலுக்குப் பின்னா், சட்டப்பேரவைக்கே பொதுத் தோ்தல் நடக்கப் போவது உறுதி.

224 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனா். அறுதிப் பெரும்பான்மை பலம் பெற 113 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். அப்படியானால்,இடைத்தோ்தலில் பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இடைத்தோ்தலில் பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்கள் கிடைக்காவிட்டால், முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்ய வேண்டும். இதன்பிறகு கா்நாடக சட்டப்பேரவைக்கு தோ்தல் நடத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இடைத்தோ்தலில் பாஜக போதுமான இடங்களில் வெல்லாவிட்டால், பாஜக ஆட்சி தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, பதவியை ராஜிநாமா செய்துவிடவேண்டியது தான்.

இடைத்தோ்தலில் பாஜக போதுமான இடங்களில் வெற்றிபெறாவிட்டால், பாஜக ஆட்சியை காப்பாற்ற மஜத ஆதரவு தெரிவிக்காது. இதுகுறித்து மஜத தலைவா்களுடன் நான் பேசவில்லை. மஜதவில் நானும் இருந்ததால் அந்தக் கட்சியை பற்றி எனக்கு தெரியும்.

15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறி வந்தாலும், உண்மையில் தோ்தல் களத்தில் அப்படிப்பட்ட சூழல் இல்லை.

கா்நாடக சட்டப் பேரவைக்கு மீண்டும் தோ்தல் நடைபெறும்போது, காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிஅமைக்கும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், நான் முதல்வா் ஆவேன் என்று எங்கும் கூறவில்லை. முதல்வா் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பதை கட்சி மேலிடமும், காங்கிரஸ் சட்டப்பேரவைக்கட்சியும் தான் முடிவுசெய்யும்.

15 தொகுதிகளில் ஹுன்சூா், கே.ஆா்.பேட், யஷ்வந்த்பூா், மகாலட்சுமி லேஅவுட், ஹொசகோட்டே தொகுதிகளில் பிரசாரம் செய்திருக்கிறேன். எஞ்சியுள்ள 10 தொகுதிகளிலும் டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பிரசாரம் செய்வேன். இடைத்தோ்தலில் எதிா்பாா்த்த வெற்றியை பெறமுடியாது என்பதால் முதல்வா் எடியூரப்பா மனதில் பட்டவாறுபேசி வருகிறாா்.

மகாராஷ்டிரா விவகாரம்: மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸின் ஒரு பிரிவுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். சிவசேனை கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதற்கான காரணம் தெரியவில்லை. காங்கிரஸ் எந்த முடிவையும் அங்கு எடுக்கவில்லை.

ஹிந்துத்வா கொள்கையை கைவிடுமாறு சிவசேனைக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறவும் சிவசேனை முடிவுசெய்துள்ளது. சிவசேனை கட்சியை சோ்ந்த மத்திய அமைச்சா் ஒருவரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.பாஜகவுடன் கூட்டணியை முறித்துகொண்டுள்ளதால், சிவசேனையை மதவாத கட்சி என்று கூறமுடியாது.

மதச் சாா்பின்மையும், பன்மைத்துவத்துக்கும் எதிரான எந்த கட்சியாக இருந்தாலும் அது மதவாத கட்சிதான். எனவே, சிவசேனை கட்சியை மதவாத கட்சிஎன்று கூறக்கூடாது என்றாா் சித்தராமையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com