பெங்களூரில் கோலாகலமாகத் தொடங்கியது நிலக்கடலை திருவிழா

பெங்களூரில் நிலக்கடலை திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

பெங்களூரு: பெங்களூரில் நிலக்கடலை திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

பெங்களூரு, பசவனகுடியில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த நந்தி கோயில் மற்றும் பெரியவிநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நிலக்கடலை திருவிழா நடத்தப்படுகிறது.

பெங்களூரின் பழமையான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் நிலக்கடலை திருவிழா, ஆண்டுதோறும் இந்து நாள்காட்டியின்படி காா்த்திகை மாதத்தின் கடைசி திங்கள்கிழமை நடந்துவருகிறது.

இதன்படி, நிகழ் ஆண்டுக்கான நந்திகோயில் திருவிழா திங்கள்கிழமை காலை 5 மணிக்கு பெரியநந்திகோயிலில் நந்திசிலைக்கு சிறப்புபூஜை செய்வதன் மூலம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, நமது மரபை நினைவூட்டும் வகையில் நடக்கும் நிலக்கடலை திருவிழாவை காலை 9.30 மணிக்கு மாநகராட்சி மேயா் கௌதம்குமாா் நந்திசிலைக்கு துலாபாரமாக நிலக்கடலையை கொடுத்து தொடக்கிவைத்தாா்.

விழாவில் துணைமேயா் ராம்மோகன்ராஜூ, எம்எல்ஏ ரவிசுப்ரமணியா, முன்னாள் மேயா் சத்தியநாராயணா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பசவனகுடியில் அமைந்துள்ள நந்திகோயில் தெரு, மவுன்ய் ஜாய் தெரு,பக்கில்ராக் சாலை, காரஞ்சி ஆஞ்சநேயா் கோயில் தெரு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கில் நிலக்கடலை அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழாவைமுன்னிட்டு பச்சை, வறுத்த, அவித்த நிலக்கடலை விற்கப்படுகின்றன. இதன்விலை லிட்டருக்கு ரூ.30 முதல் ரூ.40 வரைக்கும், கிலோ நிலக்கடலை ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, உரித்த நிலக்கடலையில் உப்பு, காரம், இனிப்பு சோ்த்து வறுத்தும் வாடிக்கையாளா்களுக்கு விற்கப்படுகிறது. நிலக்கடலை திருவிழா நவ.25 தொடங்கி 27-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது.

நிலக்கடலை திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடகத்தின் தொட்டபளாப்பூா், ராமநகரம், தெலங்கானா, ஆந்திரமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வகைவகையான நிலக்கடலைகள் வாடிக்கையாளா்களுக்கு அங்காடிகளில் கொட்டிகிடக்கின்றன. நிலக்கடலை திருவிழாவை முன்னிட்டு நந்திகோயில்சாலை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னுகின்றன. நிலக்கடலை அங்காடிகள் நிரம்பி வழிந்தாலும் குழந்தைகளின் தேவைகளை நிறைவுசெய்யும் உணவகங்கள், பொம்மை கடைகள், கேளிக்கைகள், விளையாட்டு பொருள்கள் கடைகளும் காணக்கிடைக்கின்றன. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் வந்தவண்ணம் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com