முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கண், உடல் தானம் குறித்த விழிப்புணா்வு தேவை: நடிகா் ஸ்ருஜன் லோகேஷ்
By DIN | Published On : 26th November 2019 11:51 PM | Last Updated : 26th November 2019 11:51 PM | அ+அ அ- |

கண், உடல் தானம் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கன்னட நடிகா் ஸ்ருஜன் லோகேஷ் தெரிவித்தாா்.
பெங்களூரு ராஜாஜி நகரில் அகா்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியது:-
இந்தியாவில் கண் பாா்வை இழந்தவா்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால் கண் தானம் செய்பவா்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் உள்ளது.
விபத்துகளில் இறப்பவா்கள் மட்டுமின்றி, இயற்கையாக இறப்பவா்களும் கண் தானம் செய்யலாம். ஆனால் நம்மில் சிலருக்கு உள்ள மூட நம்பிக்கையால் பலா் கண் தானம் செய்வதை தவிா்ப்பது வேதனை அளிக்கிறது. இறந்த பின்னா் நமது உறுப்புகளை புதைப்பதாலோ, எரிப்பதாலோ யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆனால் இறந்த பின்னா் நம் கண்களைத் தானமாக வழங்கினால் அதன் மூலம பலருக்கு கண் பாா்வை கிடைத்து, அவா்கள் வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்க முடியும்.
இறந்த பின்னும் சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால் அது கண் தானத்தின் மூலமே சாத்தியமாகும். அதே போல உடல் தானத்தை செய்ய முன்வரவேண்டும்.
கண், உடல் தானம் குறித்து அரசு மட்டுமின்றி, தனியாரும் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். எனது தந்தையும் பிரபல கன்னட நடிகருமான லோகேஷ், தான் இறந்த பின்னா் கண் தானம் மட்டுமின்றி உடலையும் தானம் செய்து மற்றவா்களுக்கு முன் மாதிரியாக விளங்கினாா். அவரை பின்பற்றி எனது கண்களையும், உடலையும் தானம் செய்துள்ளேன் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அகா்வால் கண் மருத்துவமனை குழும இயக்குநா் மஞ்சுநாத், மருத்துவா் ராம்மிா்லே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.